பெண்கள் கருவுற்றதும் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கும். அந்தப் பெண்ணும் தன் தாய்மையைக் கொண்டாடுவாள். ஆனால், உடலில் நிகழும் மாற்றங்கள், பிரசவம் குறித்த பயம், ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை கர்ப்பிணிக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும். கர்ப்பக்காலத்தில் வரும் மன அழுத்தம் இயல்பானதா… அது பிரசவத்தை பாதிக்குமா என்பது போன்ற தகவல்களை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நந்தினி ஏழுமலை…
“பல பெண்களுக்கு குழந்தை பிறந்த பின், மனஅழுத்தம் வரும். அதை போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன் என்பார்கள். குழந்தை பிறப்பதற்கு முன் வரும் கர்ப்ப கால டிப்ரெஷன், ஆய்வின்படி எல்லா பெண்களுக்கும் வருவதில்லை. ஆனால், 10-ல் ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தின்போது மன அழுத்தம் நிகழ்கிறது. மனஅழுத்தம் நிகழ பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக உடல்நிலை மாற்றங்கள். கருவுற்று இருக்கும்போது உடலில் மாற்றங்கள் நிகழும், உடல் எடை கூடும். சில பெண்களுக்கு வாந்தி மயக்கம் போன்றவை வரலாம். இந்தக் காரணங்களால் அவர்களுக்கு மனஅழுத்தம் வர வாய்ப்புண்டு.
ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் நிகழ்வதால் அடிக்கடி மனநிலை மாற்றம் நிகழலாம். இதனால் கார்டிசோல் ( cortisol ) ஹார்மோன் உடலில் அதிகமாக சுரக்கும். கார்டிசோல் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்போது பயம், பதற்றம் போன்றவை வருவது இயல்பு.
இதனால் மனஅழுத்தம் வரும். சில பெண்களுக்கு மரபணு காரணமாகக்கூட மன அழுத்தம் வரும். தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு போன்றவையும் மனஅழுத்தத்துக்கான காரணங்கள். இவையில்லாமல் ஒரு பெண் சிறு வயதில் வன்கொடுமைகளுக்கு ஆளாகி இருந்தாலோ, இதற்கு முன் அடிக்கடி கருக்கலைப்பு நிகழ்ந்திருந்தாலோ பிரசவத்துக்கான சிகிச்சையில் இருந்தாலோகூட மன அழுத்தம் வரும்.

கர்ப்பக்கால மனஅழுத்ததை இயல்பாக எடுத்துக்கொண்டால் தாய் – சேய் இருவருக்கும் பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. கர்ப்பக் காலத்தில் மனஅழுத்தம் அதிகமாகும்போது கருவுற்று இருக்கும் பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். இதை பிரெக்னென்சி இண்டியூன்ஸ்டு ஹைப்பர் டென்ஷன் என்பார்கள்.
இது நிகழ்வதால் ரத்த ஓட்டம் குறைந்து ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் குறையும். ரத்த ஓட்டம் குறையும்போது குழந்தைக்குச் செல்ல வேண்டிய சத்துகளின் அளவும் குறையும். இதனால் கருக்கலைப்பு நிகழவும், குறைப்பிரசவம் நிகழவும் வாய்ப்புகள் அதிகம்.
சில தாய்மார்கள் கருவுற்று இருக்கும்போது வரும் மனஅழுத்தத்தை இயல்பாக எடுத்துக்கொள்வார்கள். குழந்தைக்காகப் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அது தீவிர மனஅழுத்தமாக மாறும். நீண்ட காலமாக தாய், மன அழுத்தத்திலேயே இருந்தால் பிறக்கும் குழந்தை ஹைப்பர் ஆக்டிவ்வாக இருக்க வாய்ப்புண்டு, அல்லது அவர்களின் டீன் ஏஜில் அதிகப்படியான மனஅழுத்தத்தைச் சந்திக்கும் குழந்தைகளாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் தவிர்க்க, ஆரம்பத்திலேயே சிகிச்சை அவசியம்.

கருவுற்ற தாய்மார்கள் அடிக்கடி எரிச்சல் அடைவது, கோபப்படுவது, அழுவது, சோகமாக இருப்பது, உடல் நலன் சரியில்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகளுடன் இருந்தால் இது மகப்பேறின்போது இயல்பானது என்று சொல்லாமல், அவர்களின் அருகில் அமர்ந்து பேசுங்கள். உடல் மாற்றமும், மனநிலை மாற்றமும் தற்காலிகமானது என்பதைப் புரிய வைத்து அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வாருங்கள்.
புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுங்கள். மற்ற கர்ப்பிணிகளுடன் பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுங்கள். மருத்துவரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சி செய்யலாம். பொதுவாக, உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்கிற ஹார்மோன் உடலில் சுரந்து மகிழ்ச்சியான மனநிலையை உண்டுபண்ணும்.

இதையும் தாண்டி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் இருப்பது, அடுத்தவர்களை அடிக்கடி தாக்குவது, கத்துவது போன்ற சூழலில் கர்ப்பிணி இருக்கிறார் என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.
சரியான நேரத்தில் அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் தாய் – சேய் இருவரையும் எந்தப் பிரச்னையும் இன்றி காப்பாற்ற முடியும். மனஅழுத்தம் இருந்தாலும் இல்லையென்றாலும் கருவுற்று இருக்கும் பெண்களுக்கு அவர்களின் குடும்பம் ஆதரவாக இருந்தால் மகப்பேறு காலம் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார்.