மகாராஷ்டிரா மாநிலத்தில் அரை நூற்றாண்டு காலமாக அரசியல் தலைவராக இருந்தவர் சரத் பவார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியை உருவாக்கி மூன்று முறை மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்சி செய்த தேர்ந்த அரசியல்வாதி தற்போது தன் தலைவர் பதவியைத் துறந்திருக்கிறார். அதன் பின்னணி என்ன?
யார் இந்த சரத் பவர்?
1958-ம் ஆண்டு தன் அரசியல் பயணத்தை காங்கிரஸ் கட்சியில் துவங்கியவர், 1999-ம் ஆண்டு அந்தக் கட்சியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடங்கினார்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இவரின் சுயசரிதைப் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில் திடீரென தான் பொறுப்பு வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவிலிருந்து விலகயிருப்பதாக அறிவித்தார்.
என்ன பேசினார் சரத் பவார்?
பதவியைத் துறப்பதை அறிவித்தவர், இளம் தலைமுறையினருக்கு வழிவிடும் வகையில் புதிய தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கப்போவதாக சரத் பவார் தெரிவித்தார். மேலும், தலைமைப் பொறுப்பைத்தான் துறப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினராக என் மக்கள் பணி தொடரும்” எனப் பேசியிருந்தார்.
இதைக் கேட்டு முதல் வரிசை தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரையிலும் அனைவருக்கும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அங்கு தொண்டர்கள் பலரும் அவரின் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறும் வரையிலும் போராடுவோம் என சாலையில் அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவர்களைக் காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஆனால், அதிலிருந்து பின்வாங்கும் எந்த திட்டமும் இல்லை என்பது, அவர் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க ஒரு கமிட்டியை உருவாக்கியது காட்டுகிறது. அதற்கான பணிகளும் ஒருபக்கம் நடந்து வருகிறது.