மழையைப் பொழியக்கூடிய மேகங்களில், மருந்துக்கு கட்டுப்படாத 29 வகை பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், மழையில் நனைந்தாலே ஆபத்தா என்பதற்கு மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஃப்ரான்ஸ் மற்றும் கனடாவை சேர்ந்த விஞ்ஞானிகள், வானில் மிதக்கும் மேகங்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு முதல், 2021 வரை சேகரிக்கப்பட்ட மேகத்தின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் முடிவுகள் `சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆய்வு முடிவில், மேகங்களில் மருந்துக்கு கட்டுப்படாத 29 வகை பாக்டீரியாக்கள் (Drug resistance bacteria) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேக நீரில் ஒரு மில்லிலிட்டரில் 330 முதல் 30,000 வரையிலான பாக்டீரியாக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்டீரியாக்கள் நிரம்பிய மேகங்கள், பல மைல் தூரங்கள்வரை கூட வானில் மிதந்து பயணிக்க முடியும் என்பதால், உலகின் பல நாடுகளுக்கும் இது பரவலாம் என எச்சரித்துள்ளனர். எனினும், இவற்றால் மனிதர்களுக்கு எத்தகைய ஆபத்து நேரிடலாம் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து, ஆய்வின் தலைமை விஞ்ஞானி ஃப்ளோரென்ட் ரோஸி கூறும்போது, “மருந்துக்கு கட்டுப்படாத இத்தகைய பாக்டீரியாக்களை, பொதுவாக மண் மற்றும் இலை, தழைகளில் பார்க்க முடியும். இந்த பாக்டீரியாக்கள் காற்றின் மூலமாக மேகங்களுக்குச் சென்றிருக்கலாம். இவை மேகங்கள் மூலமாகவே நெடுந்தூரம் பயணிக்க முடியும். இவற்றால் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்து இருக்கும் என்று தோன்றவில்லை. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலானவை ஏற்கெனவே நம்முடைய சுற்றுச்சூழலில் இருப்பவைதான். எனவே, மழையில் நனைவதற்கே மக்கள் அச்சப்படும் சூழல் இல்லை” என்றார்.

இந்த ஆய்வு முடிவு பற்றி, தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ் குமாரிடம் கேட்டோம்… “இந்த ஆய்வில் கூறியுள்ள மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்கள் பொதுவாகவே சுற்றுச்சூழலில் அதிகமாக உள்ளன. அதுவும் இன்றைய சூழலில் அவற்றின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்துள்ளன என்றே கூறலாம். ஆனால் இந்த ஆய்வில் கூறியுள்ளபடி அவை மேகங்களில் இருக்குமா, அவற்றால் பல மைல் தூரம் பயணிக்க முடியுமா என்றெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை. பொதுவாகவே வைரஸுடன் ஒப்பிடும்போது, பாக்டீரியாக்கள் அளவில் பெரியவை என்பதால் அவை காற்றில் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு. அளவில் சிறியதாக உள்ள சில பாக்டீரியாக்கள்தான் காற்றில் பரவுவதற்கான வாய்ப்புண்டு.
மேலும் மழை பொழியும்போது மழைநீரில் நோய்க்கிருமிகளும் சேர்ந்து வரக்கூடும் என்பதும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. மழை பெய்யும் போது வரும் மழைநீர் பெரும்பாலும் சுத்தமாகவே இருக்கும். இருப்பினும் மழைக்கு பின்னர் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு, ஏற்கெனவே நம் சுற்றுச்சூழலில் நிரம்பியுள்ள நோய்க்கிருமிகள்தான் காரணமே தவிர, மழை நீர் என்று சொல்ல முடியாது” என்றார்.