வனப்பகுதிக்குள் டிரெக்கிங் – அரசு அலுவலர்கள் மனநலன் காக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி!

Share

விருதுநகர் மாவட்ட அரசு அலுவலர்கள்‌ மற்றும் பணியாளர்கள், தினசரி வேலையினால் எதிர்கொள்ளும் மனரீதியான சிரமங்களைச் சரிப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் புது முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி, அரசு அலுவலர்கள்‌ மற்றும் பணியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, ராஜபாளையம் பகுதியில் மலையேற்றம் செய்துவர அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அசத்தியிருக்கிறது.

அரசு அலுவலர்கள் மலையேற்றம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனிடம் பேசினோம். “அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலையில் சரியான மனநிலையும், உடல்நலனும் மிக அவசியம். 40 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் அனைவருக்குமே உடல்தகுதி மற்றும் உடல்நலன் அவசியமானது என்று விதிமுறையே உள்ளது. அதேசமயம், அவர்களுக்கு வேலையினால் எழும் மன அழுத்தங்களைக் குறைத்து ஆற்றுப்படுத்துதல் வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டியிருந்தது. எனவே புத்துணர்விற்காக, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்கள் தங்களின் குடும்பத்தோடு மலையேற்றம் சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்‌ என அனைவரும் குடும்பத்துடன் இந்த மலையேற்றத்தில் கலந்துகொள்கின்றனர். இதனால், ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்வதற்கும், அமைதியான சூழலில் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்வு பெறுவதற்கும் இந்தத் திட்டம் கைகொடுக்கிறது. குடும்பத்துடன் மலையேற்றம் செய்யும்போது அவர்களுக்குக் கூடுதலான உற்சாகம் கிடைக்கிறது. இதனால் மனதும், உடலும் இலகுவாக மாறிடும். அதேசமயம், உடல்நலனுக்கும் நல்லதொரு உடற்பயிற்சியாக மலையேற்றம் அமைகிறது. மலையேற்றத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக வனத்துறையினர் வழிகாட்டுதலின் பேரில் முறையான பாதுகாப்புடன் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் ஆட்சியர்

4 முதல் 5 மணி நேரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மலையேற்ற அனுபவத்தின் மூலமாகக் கிடைக்கும் புத்துணர்வு அவர்களுக்கு மனரீதியாக நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். மலையேறுதல் மற்றும் கீழிறங்குதல் என மொத்தமாகச் சேர்த்து சுமார் 8 கி.மீ வனப்பகுதிக்குள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் வனத்தின் வளமை, வனவிலங்குகளின் வாழ்விட சூழல், இயற்கை நீரோடை, வழிபாட்டுத் தலங்கள், மூலிகை மரங்கள் உட்பட இயற்கை சார்ந்த பல்வேறு விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பயணத்தில், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

அரசு அலுவலர்கள் உடல்நலன் பயிற்சி

அதன்படி, மலையேற்றப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகப்பகுதி மற்றும் சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் என்பதால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பாலிதீன் கவர், வாட்டர் பாட்டில்கள், பேப்பர் பொட்டலங்கள் வனப்பகுதிக்குள் அனுமதிக்க‌ப்படாது. அதேசமயம், இதயநோய் பிரச்னை உள்ளவர்கள் இந்த மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மற்றபடி, ரத்த அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் மருத்துவர்களின் தகுந்த அறிவுரையோடு சென்றுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com