Doctor Vikatan: மாதவிடாய் நாள்களில் வயிற்றுப்போக்கு… குடல் வீக்கம் காரணமாகுமா?

Share

Doctor Vikatan: என் வயது 28. மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்போக்கு வந்துவிடுகிறது. பல வருடங்களாக இப்படித்தான்…. குடல் வீக்கம் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு? குடல் வீக்கத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

பீரியட்ஸ் நேரத்தில் புராஸ்டாகிளாண்டின்ஸ் (Prostaglandins) எனப்படும் ஹார்மோன் மாதிரியான ஒரு பொருள் உடலில் அதிகரிக்கும். இந்த புராஸ்டாகிளாண்டின்ஸ்தான் கர்ப்பப்பையைச் சுருங்க வைக்கும். அப்போதுதான் உள்ளே உள்ள மாதவிடாய் ரத்தமானது வெளியே வரும்.

சில நேரங்களில் இந்த புராஸ்டாகிளாண்டின்ஸ், குடல் பகுதியையும் சுருங்கச் செய்யும். அதன் விளைவாக சிலருக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி ஏற்படலாம். பீரியட்ஸ் நாள்களில் ஏற்படுகிற வயிற்றுவலிக்கும் இந்த புராஸ்டாகிளாண்டின்ஸ்தான் காரணம்.

மாதவிடாய் நாள்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முதல் வேலையாக நீங்கள் உங்கள் உணவுப்பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யலாம். பீரியட்ஸ் தொடங்குவதற்கு ஒரு வாரம் முதல் பத்து நாள்களுக்கு முன்பிருந்தே கஃபைன் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதாவது காபி, கார்பனேட்டடு பானங்களைத் தவிர்க்க வேண்டும். அதுபோலவே இனிப்பு மற்றும் மசாலா, காரம் சேர்த்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் ஓரளவுக்கு இந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

மசாலா உணவுகள்

பீரியட்ஸ் நாள்களில் வரும் வயிற்றுப்போக்கையும் மற்ற நாள்களில் வரும் வயிற்றுப்போக்கைப் போலவே சிகிச்சை அளித்து சரியாக்கலாம். அதாவது நிறைய திரவ உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். புரோபயாடிக் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். தயிர், யோகர்ட் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த முடியும். குடல் வீக்கம் என நீங்கள் குறிப்பிட்டிருப்பதை ‘இன்ஃப்ளமேட்டரி பவல் டிசீஸ்’ என்று சொல்வோம். ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்போக்கு ஏற்படுவது தொடர்ந்தால் அது புராஸ்டாகிளாண்டின்ஸ் அதிகரிப்பதன் காரணமாக இருக்கலாம்.

சமீபத்தில்தான் அந்த மாற்றம் ஏற்பட்டது, வயிற்றுப்போக்கானது இரண்டு நாள்களுக்கு மேல் நீடிக்கிறது, அதில் ரத்தம் அல்லது சளி கலந்து வெளியேறுகிறது என்றால் அது குடல் வீக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் இது அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் (Ulcerative colitis) எனப்படும் குடல் வீக்க அறிகுறியாக இருக்கலாம்.

மற்றபடி வயிற்றுப்போக்கு ஒரு நாள் மட்டும் இருந்தாலோ, சளியோ, ரத்தமோ கலந்து வெளியேறாத பட்சத்திலோ இது குடல் சம்பந்தமான பிரச்னையாக இருக்க வாய்ப்பில்லை.

வயிறு உபாதை

ஸ்ட்ரெஸ் அதிகமிருந்து, தூக்கமின்மையும் இருந்தாலும் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே நீங்கள் ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக்கொள்ள யோகா, தியானம் செய்யலாம். வயிற்றுப்போக்கு தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com