பட மூலாதாரம், BCCI/ IPL
பெங்களூரு அணி சேஸிங் செய்யும் போது, 10 ஓவரின் முடிவில் 121 ரன்களை குவித்து இருந்தது. களத்தில் மேக்ஸ்மெல், டு பிளெசி ஆகியோர் அபாரமாக விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அந்த தருணத்தில் பெங்களூரு அணி அதே ரன்ரேட்டை தொடர்ந்து இருந்தால், சென்னையை எளிதாக வீழ்த்தி இருக்க முடியும்.
ஆனால் அடுத்து வந்த மிட் ஓவர்களில் கூலான அணுகுமுறையுடன் கச்சிதமான பீல்டிங் செட்டப்பை கொண்டு வந்து, பெங்களூருவின் முக்கிய விக்கெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் வீழ்த்தி சென்னைக்கு வெற்றியை பெற்றுத் தர உதவியாக இருந்தார் கேப்டன் தோனி.
முதல் இன்னிங்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 226 ரன்கள் குவித்து இருந்த நிலையில், இரண்டாவதாக களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதியில் பெங்களூரு அணிக்கு வெற்றியை பெற்றுத் தர களமிறக்கப்பட்ட இம்பாக்ட் பிளேயரால் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுத் தர முடியாமல் போனது.
ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெசி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. சென்னை அணிக்காக கான்வே 83 ரன்கள் குவித்து இருந்தார்.
சென்னையின் அதிர்ச்சி வைத்தியம்
பட மூலாதாரம், BCCI/ IPL
227 ரன்கள் என்ற இலக்குடன் தனது இன்னிங்சை தொடங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், டு பிளெசியும் களமிறங்கினார்கள்.
சென்னை அணியில் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக இம்பாக்ட் பிளேயராக ஆகாஷ் சிங் உள்ளே வந்தார். அவரே முதல் ஓவரை சென்னை அணிக்காக வீசினார். ஆகாஷ் வீசிய இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு வீளாசினார் கோலி.
ஆனால் அந்த ஓவரின் நான்காவது பந்திலேயே கோலியை போல்டாக்கி, தான் உள்ளே அழைத்து வரப்பட்ட இம்பாக்டை ஏற்படுத்தினார் ஆகாஷ். அதனால் முதல் ஓவரிலேயே 6 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார் கோலி.
கோலியின் விக்கெட்டை இழந்த சில நிமிடத்திலேயே ஒன்டவுனாக வந்த லோம்ரோரை அவுட்டாக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் ஓவரின் கடைசிப் பந்தில் லோம்ரோர் கொடுத்த கேட்சை தீக்ஷனா கோட்டை விட்டார்.
ஆனால் இந்த தவறுக்கு சென்னை அதிக விலை கொடுக்கும் முன்பே அடுத்த ஓவரிலேயே லோம்ரோர் வெளியேற்றப்பட்டார். துஷர் தேஷ்பாண்டே வீசிய அந்த ஓவரின் கடைசிப் பந்தில் தூக்கி அடிக்கபட்ட ஷாட்டை ரித்துராஜ் பிடித்தார்.
சென்னை திணறவைத்த பேட்டர்கள்
பட மூலாதாரம், BCCI/ IPL
ஆரம்பத்திலேயே கோலியின் விக்கெட்டை காலி செய்து, பெங்களூருவை கட்டுப்படுத்தலாம் என கணக்கு போட்டு இருந்த சென்னை அணிக்கு சிம்ம சொப்பனமாக மேக்ஸ்வெல்லும், டு பிளெசியும் மாறினார்கள்.
3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி சென்னையை புரட்டி எடுத்தது. முதல் 2 ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த பெங்களூருவின் ரன்ரேட்டை மிக வேகமாக உயர்த்த உதவியது இந்த இணை.
சென்னையின் பவுலர்களான ஆகாஷ் சிங், துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனாவின் பந்துகளை மைதானம் முழுவதும் விரட்டி அடித்தனர் பெங்களூருவின் இந்த பேட்டர்கள்.
தொடர்ந்து ஃபோரும், சிக்சருமாக அடித்து சென்னைக்கு பிரச்னையாக மாறினார்கள். ஒன்பதாவது ஓவரில் டு பிளெசியும், பத்தாவது ஓவரில் மேக்ஸ்வெல்லும் அரை சதத்தை அடித்தனர்.
பத்து ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது. சென்னை அணி பத்து ஓவர் முடிவில் 97 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது.
கேட்சை தவறவிட்ட சென்னை
பட மூலாதாரம், BCCI/ IPL
11வது ஓவரை வீசிய சென்னையின் சுழற்பந்து வீச்சாளரான தீக்ஷனா, இரண்டாவது முறையாக ஒரு கேட்சை தவறவிட்டார். டு பிளெசி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தட்டுத்தடுமாறி தவறவிட்டார் தீக்ஷனா.
ஆனால் தன் தவறுக்கு பொறுப்பு ஏற்கும் வகையில் தன்னுடைய அடுத்த ஓவரிலேயே சென்னைக்கு தேவைப்பட்ட விக்கெட்டை வீழ்த்தினார் தீக்ஷனா.
மேக்ஸ்வெல் அடித்த பந்து உயரத்தில் மேலே எழ, அதை நோக்கி தீக்ஷனா வர வேண்டாம் என்று கூறியபடியே ஓடிச்சென்று கேட்சை பிடித்தார் சென்னையின் கேப்டன் தோனி. அதையடுத்து 36 பந்துகளில் 76 ரன்களை குவித்து வெளியேறினார் மேக்ஸ்வெல். தன்னுடைய இன்னிங்சில் மொத்த 8 சிக்ஸ், 3 ஃபோர்களை விளாசினார் மேக்ஸ்வெல்.
அந்த ஓவரிலேயே டு பிளெசிக்கு எதிராக எல்.பி.டபுள்யூ அப்பீல் கேட்டார் தீக்ஷனா. அனால் நடுவர் அதை தர மறுக்க, பவுலரிடம் கேட்டு ரிவியூ கேட்டார் தோனி.
ஆனால் பந்து ஸ்டம்புக்கு ஆஃப் சைடு பிட்ச் ஆனதால் விக்கெட் வழங்கப்படவில்லை. சென்னைக்கு பயமளிக்கும் வகையில் டு பிளெசி களத்தில் இருந்தார்.
13வது ஓவர் முடிவிலேயே சென்னை, தனது ஸ்பின் பவுலர்களை வைத்து 8 ஓவர்களை வீசிய போதும் டு பிளெசியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
பின்னர் வந்த மொயின் அலி, சென்னைக்கு மிகவும் தேவைபட்ட டு பிளெசியின் விக்கெட்டை வீழ்த்தினார். மேக்ஸ்வெல்லின் கேட்சை போல உயரத்தில் சென்ற பந்தை தோனி விரட்டி சென்று பிடித்தார்.
ஆனால் பெங்களூரு அணிக்கு நல்ல அடித்தளத்தை கொடுத்த டு பிளெசி, 33 பந்துகளில் 62 ரன்களுடன் வெளியேறினார்.
தோனியின் பீல்டிங் வியூகம்
10 ஓவர் முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை குவித்து இருந்த பெங்களூரு அணி, 18வது ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்திருந்தது.
வெற்றி பெற 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியில் பெரிய ஹிட்டர்கள் யாரும் இல்லாமல் இருந்தனர்.
களத்தில் இம்பாக்ட் பிளேயர் மட்டுமே இருந்த நிலையில், அவருடன் விளையாடிய பர்னெலை 19வது ஓவரில் வீழ்த்தினார் துஷர் தேஷ்பாண்டே.
ஆனால் அதே ஓவரில் ஒரு பந்தை சிக்ஸுக்கு விரட்டி பெங்களூரு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார் பிரபுதேசாய்.
19வது ஓவரின் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு.
சென்னை அணிக்காக கடைசி ஓவரை வீச வந்தார் இளம் பவுலரான பதிரானா. வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இம்பாக்ட் பிளேயரை நம்பி கடைசி ஓவரை எதிர்கொண்டது பெங்களூரு அணி.
ரன்கள் அதிகம் போகதவாறு பீல்டிங்கை கச்சிதமாக செட் செய்திருந்தார் தோனி. கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் தலா 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் மூன்றாவது பந்தை சிக்சராக்கினார் பிரபுதேசாய்.
ஆனால் வெற்றிக்கு தேவைப்பட்ட கூடுதல் 11 ரன்களை எடுக்க முடியாமல் தோற்று போனது பெங்களூரு அணி.
இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏமாற்றிய கெய்க்வாட்
பட மூலாதாரம், BCCI/ IPL
டாஸ் வென்ற பெங்களூரு அணி, பீல்டிங் தேர்வு செய்ததையடுத்து சென்னை அணிக்காக ரித்துராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை பெங்களூரு அணியின் சிராஜ் வீசினார். இதில் நான்கு டாட்பால் உட்பட 3 ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்தார் சிராஜ்.
சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் சென்னை அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. லெக்சைடில் கெய்க்வாட் தூக்கி அடித்த பந்தை பவுண்டரி லைனுக்கு அருகே கேட்ச் பிடித்தார் பர்னெல். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்த சென்னை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 5வது ஓவரில் பந்து வீச வைஷாக் வந்த போது அடித்து ஆட தொடங்கியது சென்னை. அந்த ஓவரில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் என மொத்தம் 15 ரன்களை குவித்தது ரஹானே, கான்வே ஜோடி.
தொடர்ந்து அடித்து ஆடிய இந்த இணை பவர்பிளே ஓவரின் முடிவில் சென்னை அணியில் ஸ்கோரை 53ஆக உயர்த்தியது.
அதிரடியாக ஆடிய ரஹானே தொடர்ந்து பவுண்டரிகளை விளாசினார். சென்னை அணியின் ரன்களை உயர்த்தி வந்த இந்த ஜோடியை பிரிக்க பெங்களூரு அணி மேக்ஸ்வெல், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் என பல பந்துவீச்சாளர்களை களமிறக்கியது.
9வது ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி. டைம் அவுட்க்கு பின்னர் 10வது ஓவரை வீச வந்த ஹசரங்கா, பெங்களூரு அணியை எதிர்பார்த்த திருப்புமுனையை அளித்தார்.
ஹசரங்காவின் கூக்ளி சுழலில் க்ளின் போல்டானார் ரஹானே. 20 பந்துகளில் 3 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து 37 ரன்கள் குவித்து வெளியேறினார் ரஹானே.
ஆனால் தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிய கான்வே, அரை சதத்தை கடந்தார். அதைத் தொடர்ந்து பத்து ஓவர் முடிவில் சென்னை அணி 97 ரன்கள் குவித்தது.
பட்டாசாக வெடித்த கான்வே
பட மூலாதாரம், BCCI/ IPL
அரை சதம் அடித்த பிறகு கான்வே மட்டை வேகமாக சுழன்றது. அதிரடியாகவும், அதே நேரத்தில் நிதானத்தையும் வெளிப்படுத்திய கான்வே ரன் ரேட்டை உயர்த்தி வந்தார்.
வைஷாக் வீசிய 12வது ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரியாக மாற்றினார் கான்வே. அதே ஓவரின் கடைசிப் பந்தை லெக்சைடில் பவுண்டரி லைனுக்கு மேலே தூக்கி அடித்து சிக்ஸாக்கினார் கான்வே. அந்த ஓவரில் சென்னை அணி, 16 ரன்களை குவித்தது.
சென்னை அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்த கான்வேயின் விக்கெட்டை குறிவைத்து பந்து வீசியது பெங்களூரு அணி. ஹர்ஷல் படெல், சிராஜ் என வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கினார் அந்த அணியின் கேப்டன் டு பிளெசி.
பெங்களூருவை சிதறடித்த துபே – கான்வே
பட மூலாதாரம், BCCI/ IPL
ரஹானேவுக்கு பிறகு களமிறங்கிய துபே ஆரம்பம் முதலே அதிரடியாக அடித்து ஆடினார். ஒருமுனையில் கான்வே பவுண்டரிகளை அடிக்க, மறுமுனையில் துபே சிக்சர்களாக பறக்கவிட்டார்.
கான்வேயின் அதிரடியை கட்டுப்படுத்த முயற்சி செய்த பெங்களூரு பந்துவீச்சாளர்களுக்கு புதிய தலைவலியாக ஷிவம் துபே உருவெடுத்தார். சிராஜ் வீசிய 14 ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து 14 ரன்களை குவித்தார் துபே. அடுத்த ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்து அதிரடியை தொடர்ந்தார் துபே.
நீயா நானா என போட்டி போட்டு விளையாடிய கான்வேயும் அதே ஓவரில் தன்பங்குக்கு ஒரு சிக்ஸரும், ஒரு ஃபோரும் அடித்தார். 15 ஓவர் முடிவில் இந்த ஜோடி சென்னை அணியின் ரன்னை 165 ஆக உயர்த்தியது.
ஆனால் அடுத்த ஓவரிலேயே கான்வேயை வெளியேற்றியது பெங்களூரு. ஹர்ஷல் படேல் வீசிய யார்கர், கான்வேயை ஏமாற்றி ஸ்டம்பை பதம் பார்த்தது.
45 பந்துகளில் 83 ரன்களை குவித்திருந்த கான்வே அத்துடன் வெளியேறினார். அவரின் இன்னிங்சில் 6 சிக்ஸ், 6 ஃபோர்களை அடித்திருந்தார்.
கான்வே வெளியான அடுத்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே சிக்ஸாக்கி அரைசதமடித்தார் துபே.
25 பந்துகளில் 52 ரன்களை குவித்த துபே, அதே ஓவரில் அவுட்டானர். பர்னெல் வீசிய பந்தை டீப் மிட் விக்கெட்டில் துபே தூக்கி அடிக்க அதை சிராஜ் எல்லைக்கோட்டுக்கு அருகே நிதானமாக பிடித்தார்.
கடைசி ஓவர்களில் விக்கெடுகளை இழந்த சென்னை
பட மூலாதாரம், BCCI/ IPL
கான்வே, துபேவின் விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு களமிறங்கிய அம்பதி ராயுடுவும், மொயின் அலியும் சென்னை அணிக்காக ரன் சேர்க்கத் தொடங்கினர். வந்தவுடனே அலியும், ராயுடும் தங்கள் பங்கிற்கு ஆளுக்கு ஒரு சிக்ஸ் அடித்தனர்.
ஆனால் இந்த பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முந்தைய ஓவர்களில் தொடர்ந்து அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வைஷாக் தனது கடைசி ஓவரில் ராயுடுவை அவுட்டாக்கினார். ராயுடு அடித்த ஷாட், டாப் எட்ஜாகி மேலே செல்ல அதை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
18வது ஓவர் முடிவில் சென்னை அணி 200 ரன்களை கடந்தது. ராயுடுவுக்கு அடுத்து மொயின் அலியுடன் ஜடேஜா களமிறங்கினார்.
சென்னை அணியின் ரன்வேகத்தை, பெங்களூரு பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கட்டுப்படுத்தினார். 19வது ஓவரில் அவர் 10 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்தார்.
கெய்க்வாட் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்திய சிராஜ் 4 ஓவர்களை வீசிய 30 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்து நோபால் ஆனது. இதைத் தொடர்ந்து ஃபீரிஹிட் வழங்கப்பட்டது. ஆனால் அதை ஜடஜா பவுண்டரியாக மாற்றத் தவறினார்.
தொடர்ந்து மூன்றாவது பந்தை வைடாகவும், நோபாலாகவும் வீசினார் ஹர்ஷல். சென்னை அணி ரிவியூ கேட்க அதை சோதித்த நடுவர்கள் நோபால் என அறிவித்து ஃபீரிஹிட் வழங்கினர்.
ஆனால் தொடர்ந்து 2 நோபால், 1 வைடுபாலை ஹர்ஷல் படேல் வீசியதால் அந்த ஓவரை தொடர மேக்ஸ்வெல் உள்ளே வந்தார்.
மீண்டும் கிடைத்த ஃபீரிஹிட் வாய்ப்பை சிக்சராக்கினார் ஜடேஜா. ஆனால் அடுத்த பந்திலேயே ஜடேஜா அவுட்டானார்.
இரண்டு பந்துகள் மீதமிருக்க களமிறங்கிய தோனி, முதல் பந்தில் சிங்கிள் அடித்தார். முடிவில் சென்னை அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.
பெங்களூரு அணி கடைசி ஓவரில் மட்டும் 2 வைடு பால், 2 நோபால் உட்பட 10 பந்துகளை வீசியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: