ஒரே சிறையில் உள்ள 44 கைதிகள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரகாண்ட் ஹல்த்வானியில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உட்பட 44 சிறைவாசிகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுசீலா திவாரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பரம்ஜித் சிங் கூறுகையில், “சிறையில் உள்ள 44 கைதிகள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறைவாசிகளுக்கு ஆன்டிரிட்ரோவைரல் தெரபிக்கான (ART- Antiretroviral Therapy) சென்டர் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. என்னுடைய குழு சிறையில் உள்ளவர்களைத் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறது.
எந்தவொரு சிறைக் கைதியும் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு இலவச சிகிச்சையும் மருந்துகளும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின்படி வழங்கப்படும்.
தற்போது இந்தச் சிறையில் 1,629 ஆண்களும் 70 பெண்களும் உள்ளனர். அதிகப்படியான சிறைக் கைதிகள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறை நிர்வாகம் தொடர்ச்சியாகச் சிறைக் கைதிகளுக்குச் சோதனைகளைச் செய்து வருகின்றனர். இதன்மூலம் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.