ஸ்மூத்தி, புடிங், லஸ்ஸி, கீர்… நுங்கு ஸ்பெஷல் வீக் எண்ட்

Share

கோடை கொண்டுவரும் கொண்டாட்டங்கள் எத்தனையோ…. அவற்றில் முக்கியமானது நுங்கு. கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கை அப்படியேவும் சாப்பிடலாம்… அசத்தலான அயிட்டங்களாக மாற்றியும் ருசிக்கலாம். இந்த வார வீக் எண்டை நுங்கு ஸ்பெஷல் உணவுகளுடன் கொண்டாடத் தயாரா?

நுங்கு ஸ்மூத்தி

தேவையானவை:

தோல் நீக்கிய நுங்கு – 4

தேங்காய் – ஒரு மூடி (துருவவும்)

நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

நுங்கு ஸ்மூத்தி | வீக் எண்ட் ரெசிப்பீஸ்

செய்முறை:

தேங்காய்த் துருவலுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து முதல் பால் எடுக்கவும். மறுபடியும் தண்ணீர் சேர்த்து இரண்டாம் பால் எடுக்கவும். நுங்குடன் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அதனுடன் முதல் தேங்காய்ப்பால், இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும். குளிரவைத்தும் பரிமாறலாம்.

குறிப்பு: தேங்காய்ப்பாலைப் பச்சையாகச் சேர்ப்பதால் ஒரு மணி நேரத்துக்குள் பருகுவது நல்லது. விரும்பினால் ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கலாம்.

நுங்கு புடிங்

தேவையானவை:

தோல் நீக்கிய நுங்கு – 10 (மசிக்கவும்)

காய்ச்சாத பால் – அரை லிட்டர்

கண்டென்ஸ்டு மில்க் –

தேவையான அளவு

சைனா கிராஸ் – 2 கிராம்

நுங்கு புடிங் | வீக் எண்ட் ரெசிப்பீஸ்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிச் சுண்டக் காய்ச்சவும். அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும். சைனா கிராஸை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு அடுப்பில் வைத்து, சைனா கிராஸ் கரையும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். பால் – கண்டன்ஸ்டு மில்க் கலவையுடன் நுங்கு, சைனா கிராஸ் சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றிக் குளிரவைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: பால் – கண்டென்ஸ்டு மில்க் கலவை ஆறிய பிறகே நுங்கைச் சேர்க்கவும்.

பாதாம் – நுங்கு பால்

தேவையானவை:

தோல் நீக்கிய நுங்கு – 4

பாதாம் பவுடர் – 2 டீஸ்பூன் (கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும்)

காய்ச்சாத பால் – 250 மில்லி

கண்டென்ஸ்டு மில்க் – 2 டீஸ்பூன்

சர்க்கரை, ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு

பாதாம் – நுங்கு பால் | வீக் எண்ட் ரெசிப்பீஸ்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி 250 மில்லி 200 மில்லி ஆகும் வரை சுண்டக் காய்ச்சி இறக்கி ஆறவிடவும். நுங்கை மிக்ஸியில் அடித்தெடுக்கவும். ஆறிய பாலுடன் பாதாம் பவுடர், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை, நுங்கு சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாளும் பயன்படுத்தலாம்.

குறிப்பு: விரும்பினால் பாதாம், பிஸ்தா, முந்திரித் துண்டுகள் தூவி அலங்கரித்துப் பரிமாறலாம்.

நுங்கு – முந்திரி கீர்

தேவையானவை:

தோல் நீக்கிய நுங்கு – 5

முந்திரி – 10

காய்ச்சாத பால் – 250 மில்லி

காய்ச்சிய பால் – 2 டீஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு

ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ – தலா ஒரு சிட்டிகை

அலங்கரிக்க:

பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 2 (பொடியாக நறுக்கவும்)

நுங்கு – முந்திரி கீர் – வீக் எண்ட் ரெசிப்பீஸ்

செய்முறை:

முந்திரியை ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்தெடுக்கவும். நுங்கை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். காய்ச்சிய பாலுடன் குங்குமப்பூவை ஊறவைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் காய்ச்சாத பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.

அதனுடன் அரைத்த முந்திரி விழுது, ஏலக்காய்த்தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அடித்தெடுக்கவும். இதைக் குளிரவைத்து, நுங்கு சேர்த்துக் கலந்து, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் பாலில் கலந்த குங்குமப்பூ சேர்த்துப் பரிமாறவும்.

நுங்கு லஸ்ஸி

தேவையானவை:

தோல் நீக்கிய நுங்கு – 2

தயிர் – ஒரு கப்

சர்க்கரை – 2 டீஸ்பூன்

நுங்கு லஸ்ஸி | வீக் எண்ட் ரெசிப்பீஸ்

செய்முறை:

நுங்குடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். அதனுடன் தயிர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் பொடியாக நறுக்கிய நுங்குத் துண்டுகளை மேலே தூவி அலங்கரித்தும் பரிமாறலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com