இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் இருந்தன. இந்நிலையில் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணி அளவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் பதும் நிசாங்கா 25 ரன்களும், விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் 73 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த குசால் பெரேரா 33 ரன்களும், தனஞ்செய் செல்வா 20 ரன்களும், கேப்டன் தசுன் ஷனகா 15 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை கிரிக்கெட் அணி 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.
தொடக்க வீரர் சாட் போஸ் 17 ரன்னில் வெளியேற மற்றொரு வீரரான திம் செபர்ட் 48 பந்துகளில் அதிரடியாக விளையாடி 88 ரன்களை குவித்தார். கேப்டன் டாம் லாதம் 31 ரன்களும், டேரில் மிச்செல் 15 ரன்களும், மார்க் சாப்மேன் 16 ரன்களும் எடுத்தனர். 19 புள்ளி 5வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, வெற்றி இலக்கான 183 ரன்களை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.