ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் சின்னமாதையன் (45). இவரின் மனைவி சாந்தி (42). விவசாயத் தொழிலாளிகளான இத்தம்பதிக்கு 4 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 13-வது முறையாக கர்ப்பமான சாந்திக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவல் அறிந்து சென்ற ஈரோடு மாவட்ட மருத்துவத் துறையினர் சின்னமாதையனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் (குடும்பக் கட்டுப்பாடு) மருத்துவர் ராஜசேகர் கூறுகையில், “சின்னமாத்தையனைக் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறோம். அவரது வீட்டுக்கு சாலையிலிருந்து மலை வழியே ஏறிச் செல்ல வேண்டும் என்பதால், மருத்துவக் குழுவினர் வருவதைத் தெரிந்துகொண்டு சின்னமாதையன் தப்பிவிடுவார். அருகில் உள்ள கர்நாடக மாநில எல்லைக்குள் சென்றுவிட்டு இரண்டு நாள்கள் கழித்துதான் வீடு திரும்புவார். இதையும் மீறி அவர் இருக்கும் நேரம் வீட்டுக்குச் சென்றுவிட்டால், கணவன் மனைவி இருவரும் மருத்துவக் குழுவினருடன் சண்டைக்கு வருவார்கள்.

இந்த நிலையில், கர்ப்பமாக உள்ள சின்னமாதையனின் முதல் மகனின் மனைவியைப் பரிசோதிக்க மருத்துவக் குழுவினர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பர்கூர் மலைப் பகுதிக்குச் சென்றனர். அப்போது, சின்னமாதையனின் மனைவி சாந்தியின் வயிறும் பெரிதாக உள்ளதைப் பார்த்த மருத்துவக் குழுவினர் அவரை சோதித்தபோது, அவர் 34 வாரம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மீண்டும் கர்ப்பமானது தெரியவந்தால் மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சைக்குக் கூட்டிச் சென்றுவிடுவார்கள் என்று எண்ணி சாந்தி கர்ப்பமானதை மறைத்துள்ளார்.
இதுதொடர்பாக சாந்திக்கும், சின்னமாதையனுக்கும் ஆலோசனை வழங்கிவிட்டு, பிரசவத்துக்குப் பின் இருவரில் யாராவது ஒருவர் கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திவந்தோம். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலேயே சாந்திக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

இதன் தொடர்ச்சியாக அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீஸார் உதவியுடன் சின்னமாதையன் வீட்டுக்குச் சென்றோம். அங்கு சாந்தி, சின்னமாதையனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், முதலில் சாந்திக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு ரத்த சோகை இருந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, சின்னமாதையனை கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் வழக்கம்போல் மறுத்துவிட்டார். கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. 15 நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிந்துவிடுவதுடன், வழக்கம்போல் வேலையைப் பார்க்கலாம். குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று தெரிவித்தோம்.

சின்னமாதையனுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு தொகையும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னரே கருத்தடை அறுவை சிகிச்சைக்கு சின்னமாதையன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் வைத்து சின்னமாதையனுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். ஒருவழியாக சின்னமாதையனுடனான நீண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது” என்றார்.
கருத்தடை அறுவைசிகிச்சை குறித்த விழிப்புணர்வின்றி வாழும் அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் அளித்து, குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்தும் தெரியப்படுத்தினால்தான் இத்தகைய சிக்கல்கள் தீரும்.