கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-க்ளாக்கோமா சிகிச்சை சந்திக்கும் சவால்கள் | Don’t turn a blind eye—challenges in glaucoma treatment

Share

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி     

அந்தக் குடும்பத்தில் மொத்தம்  பன்னிரண்டு பிள்ளைகள். மூத்த சகோதரிக்கு 78 வயதாகிறது. இருப்பதிலேயே கடைக்குட்டியான சகோதரிக்கு 63 வயதாகிறது. மொத்தம் ஏழு பெண்கள், ஐந்து ஆண்கள். ஓரிருவர் தவிர அனைவரும் எங்கள் ஊரிலேயே வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். அந்தக் குடும்பத்தில் நான்காவதாகப் பிறந்த பெண்ணுக்கு உயர் கண் அழுத்தத்தால் (Primary open angle glaucoma) பார்வை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வலது கண்ணில் சுத்தமாகப் பார்வை இல்லை, இடது கண்ணில் சுமார் 4 அல்லது 5 அடி தூரத்திற்கு மட்டுமே அவரால் பார்க்கமுடியும். கண் அழுத்தத்தைப் பரிசோதனை செய்து மருந்துகள் வாங்கிக் கொண்டு போவதற்காக என்னிடம் வருவார்.

உடன்பிறந்தவர்கள் எல்லாருக்கும் பரிசோதனை செய்யுங்கள் என்பேன், ‘சொல்லி இருக்கிறேன்’ என்பார் அவர். இருப்பதிலேயே மூத்த சகோதரிக்குக் கண்புரை அறுவைசிகிச்சை செய்யத் திட்டமிட்டிருந்தோம். அறுவை சிகிச்சைக்கு முன்பான பரிசோதனைகளில் அவருக்கும் லேசான கண்ணழுத்த நோயின் பாதிப்பு இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இப்போது தொடர்ச்சியாக மருந்து கொடுத்து வருகிறோம்.

இரண்டு பேருக்கு கண்ணழுத்த நோய் இருப்பதால், நான் மீண்டும் வலியுறுத்த இன்னும் நான்கு பேர் பரிசோதனை செய்து கொண்டார்கள். அதில் இரண்டு பேருக்கு கண்ணழுத்த நோய் ஆரம்ப நிலையில் இருப்பது உறுதியாகியது. சிகிச்சையைத் தொடங்கினோம்.

 சமீபமாகக் கடைக்குட்டி சகோதரியின் மகனுக்குத் திருமணம். நெருங்கிய குடும்ப நண்பர் என்பதால் நானும் சென்றிருந்தேன். எல்லா சகோதர சகோதரிகளும் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அனைவரின் ஜாடை ஒற்றுமை கவனிக்க வைத்தது. ஒரு மருத்துவர் எங்கு சென்றாலும் மருத்துவராகவே இருப்பார் என்று மருத்துவ உலகில் கிண்டலாகக் கூறுவதுண்டு. அது உண்மைதான் என்பது போல, இங்கிருப்பவர்களில் யார் யார் முறையாகக் கண் பரிசோதனை செய்துவிட்டார்கள் என்று நான் மனதிற்குள் கணக்கிட, என் எண்ணத்தைப் புரிந்துகொண்டாற் போல் வெளியூரிலிருந்து வந்திருந்த சகோதரி தன் பரிசோதனை விவரங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

 இந்த விபரங்கள் தெரியாத ஓரிரு உடன்பிறப்புக்கள், ‘‘இது என்ன புது கதை?” என்றார்கள். அதீத பார்வைக் குறைபாடு காரணமாக பிறரிடம் இருந்து ஒதுங்கி ஓரமாக அமர்ந்திருந்த நான்காவது சகோதரியிடம், ”நீங்கள் தான் இதைச் சொல்வதற்குப் பொருத்தமான ஆள், அப்புறமாக விளக்குங்கள்” என்றேன். கண் அழுத்த நோய் குறிப்பாக Primary open angle glaucoma பரம்பரையாக வரக்கூடிய ஒன்று. வழக்கமான பரிசோதனையின் போது மட்டும்தான் அதைக் கண்டுபிடிக்க முடியும். நீண்ட நாள் கழித்து பார்வை வெகுவாக பாதிக்கப்பட்ட பின் தான் நோயாளிகளால் அறிகுறியை உணர முடியும். Angle closure glaucoma போல வலி, கண்களில் நீர் வடிதல், கூச்சம் போன்ற எந்த அறிகுறியும் இந்த வகையில் இருக்காது.

கண் மருத்துவத்தில் இது ஒரு silent killer. கொஞ்சம் கொஞ்சமாக கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிப்பதால் விழித்திரையின் சில அடுக்குகளும், விழி நரம்பில் சில பகுதிகளும் தேய்மானம் அடைகின்றன. கண் அழுத்தம் வழக்கமான அளவான 17 mmHg ஐ விட மிக லேசாக அதிகரித்திருந்தால், தொடக்கம் 10 முதல் 15 ஆண்டுகளில் பார்வையிழப்பு வரக்கூடும். வழக்கமான அளவைவிட ஐந்து புள்ளிகள் அதிகரித்திருந்தால் ஐந்து ஆண்டிலும், பத்து புள்ளிகள் அதிகரித்திருந்தால் மூன்று ஆண்டுகளிலும் நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்படலாம் என்பது ஒரு உத்தேசமான கணக்கீடு.

எங்கள் உறவினரான ஒரு இளைஞர் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யக் கூடியவர். கடந்த ஆறு மாதங்களாக எனக்குப் பக்கவாட்டுப் பார்வை சரியாகத் தெரியவில்லை என்று சொல்ல, பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு மிக இளவயதிலேயே கண்ணழுத்த நோய் பாதிப்பு ஏற்பட்டு,  பார்வை நரம்பில் எண்பது சதவீதம் பாதிப்பு இருந்தது. நல்ல வேளையாக அதற்கு மேல் பார்வை பறிபோகாமல் காப்பாற்றிவிட்டோம். ஆனால் வாகனம் ஓட்டுவதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார். அவரது சகோதர சகோதரிகளுக்கு முறையான பரிசோதனை செய்திருக்கிறோம். மிக லேசான அறிகுறி தென்படும்போதே சிகிச்சையைத் துவங்கினால் அவர்களுக்கு பார்வையில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றிவிட முடியும்.

உயரம், நிறம், முக அமைப்பு, உருவ அமைப்பு போன்றவை ஒரு குடும்பத்தில் பலருக்கும் ஒன்றுபோல் இருப்பதை அடிக்கடி பார்க்கிறோம். இவை எல்லாம் மரபணுக்களில் அந்தந்த குணங்களுக்கான ஜீன்கள் மிகக் காத்திரமாக (strong gene) இருப்பதைக் குறிக்கிறது. அதைப்போலவே கண் அழுத்த நோய்க்கான மரபணுவும் மிகவும் சக்தி வாய்ந்தது. கண்ணழுத்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மரபணு பரிசோதனை செய்ததில், ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மரபு சார்ந்த காரணிகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. உங்கள் உடன் பிறந்தவர்களில் ஒருவருக்குக் கண்ணழுத்த நோய் இருக்கிறது என்றால் உங்களுக்கும் கண்ணழுத்த நோய் வருவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிறவிக் கண் அழுத்தநோய் (congenital glaucoma) வருவதற்கான சாத்தியக் கூறுகளும் மரபணுக்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தாய், தந்தை இருவரிடமிருந்து வரும் ஜீன்களில் ஏதேனும் ஒன்றில் கண்ணழுத்த நோய்க்கான மரபணு கடத்தப்பட்டிருந்தாலும் அந்த நபருக்கு கண்ணழுத்த நோய் வருவதற்கு அதிக அளவில் வாய்ப்பிருக்கிறது.

உலக அளவில் பார்வையிழப்பிற்கான இரண்டாவது பெரிய காரணியாக கண் அழுத்தநோய் இருக்கிறது. தற்சமயம் இந்தியாவில் மட்டும் சுமார் 12 மில்லியன் பேர் கண் அழுத்தநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 1.2 மில்லியன் நபர்கள் முழுவதுமாக பார்வையை இழந்தவர்கள். வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் நிலைமை இதைவிட இன்னும் மோசம். ஏன் இப்படி? எதனால் க்ளாக்கோமாவுக்கான சிகிச்சை சவாலாக இருக்கிறது?

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக ஆரம்ப கட்ட மருத்துவ நிலையங்களால் இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியாது. இன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலும் கண் பரிசோதகர்கள் மட்டுமே இருக்கின்றனர். சிலவற்றில் அவர்களும் இல்லை. கண் மருத்துவர் மட்டுமே இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும். அவருக்கும் இதைக் கண்டறிய நிறைய உபகரணங்கள் தேவை.

இரண்டாவதாக, உடனடியாக உடலைப் பாதிக்கும் நோய்களுக்கு மட்டும்தான் இன்னும் மனிதர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். இதய நோய்க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் கண்ணிற்குக் கொடுப்பதில்லை. மூன்றாவதாக, பெரும்பாலான மக்கள் முதுமையில் தான் வழக்கமான கண் பரிசோதனையை மேற்கொள்கின்றனர் சொல்லப் போனால், கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு தான் அடிக்கடி கண் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர்.  காயம், கண்களில் தூசி விழுதல், கண்வலி போன்று ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே கண் மருத்துவரின் உதவியை நாடுகின்றனர்.

நான்காவதாக, கண் அழுத்தநோய்க்கான சிகிச்சைகள் அதிக விலைமதிப்புடையதாக இருக்கின்றன. உதாரணமாக, இதற்கு வழங்கப்படும் ஒருவகை சொட்டு மருந்தின் விலை சுமார் ஐநூறு ரூபாய். ஒரு மாதத்திற்கு மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். தொடர்ச்சியாக இத்தகைய மருந்துகளை பயன்படுத்த வேண்டி இருப்பதால் அது நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் பிடித்ததைத் ஏற்படுத்துகிறது. எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருக்கும் நமது அரசு மருத்துவத் துறையிலும் கூட இந்த மருந்துகள் இலவசமாகக் கிடைப்பதில்லை.

ஜந்தாவதாக, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் நடுத்தர வயதைத் தாண்டிய மக்களை அதிகம் பாதிப்பதால் எப்போதாவது பிரச்சனை தரும் கண்ணைத் தாமதமாகவே கவனிக்கின்றனர்.உலக சுகாதார நிறுவனம் ஆயிரம் மக்களுக்கு ஒரு மருத்துவர் தேவை என்கிறது. இந்தியாவில் இந்த விகிதத்தை விட பொது மருத்துவர்களின் எண்ணிக்கை சிறப்பாகவே இருக்கிறது. 853 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.

ஆனால் கண் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்தியாவின் மக்கள் தொகையையும் கண் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டால் குறைந்தது 1,25,000 கண் மருத்துவர்கள் தேவை. ஆனால் 2020 ஆம் ஆண்டின் கணக்கீட்டுப்படி 25000 பேர் மட்டுமே இருக்கின்றனர். அதனால் மெதுமெதுவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கண் அழுத்தநோய் போன்ற நோய்களுக்கான கவனிப்பு குறைவாகவே கிடைக்கிறது. எந்த ஒரு கண் மருத்துவமனைக்குச் சென்றாலும் நீண்ட வரிசைகளையும், அதிகநேர காத்திருப்பையும் நீங்கள் சந்தித்திருப்பீர்கள். என் பார்வையில் அதுவும் பல கண்நோய்களின் பாதிப்பு அதிகரிக்க ஒரு காரணம்.

 இவை எல்லாவற்றையும் விட விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். நான் முதலில் கூறிய குடும்பத்தினர் நன்கு படித்தவர்கள். திருமணங்கள், பொது நிகழ்ச்சிகள் என்று அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்களும் கூட. இவர்களிடையே கூட இதைப்பற்றிய தொடர்பாடல் இல்லை. அப்படி இருக்கையில் இந்த நோயின் பெயரையே அறியாத மக்கள் மத்தியில் இதைக் கொண்டு செல்வது மிகப்பெரிய சவால்தான். விவரம் அறிந்தவர்கள் அனைவரும் மனது வைத்தால் இது சாத்தியம்!
   

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com