ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கும் டாஸூக்கும் செட்டே ஆகாது. இந்த சீசனில் ஒன்றிரண்டு முறை மட்டுமே டாஸை வென்றிருக்கிறார். பெரும்பாலும் அத்தனை போட்டிகளிலும் டாஸில் தோற்று எதிரணியின் விருப்பப்படியே ஆடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான். இந்தப் போட்டியில் அதிர்ஷ்டவசமாக சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக டாஸ் விழுந்தது. டாஸை வென்று முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.
பட்லரின் விக்கெட்டிற்கு பிறகு நம்பர் 3-ல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனே இறங்கினார். கடந்த போட்டிகளை போன்று அஷ்வினை மேலே அனுப்பி சுமையை ஏற்றாமல், தானாக முன் வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டு சாம்சனே நம்பர் 3-ல் இறங்கியது நேர்மறையான செயலாக அமைந்தது.
பட்லர் அவுட்டான அதே ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்து சாம்சன் ரன் கணக்கைத் தொடங்கினார். இதன்பிறகு, சாம்சன் ஒரு முனையில் கொஞ்சம் காத்து நிற்க, ஜெய்ஸ்வால் இன்னொரு முனையில் சமீராவின் ஓவரில் பிரித்தெடுத்தார். சிக்ஸரும் பவுண்டரியுமாக இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் வந்திருக்கும். பவர்பிளே முடிந்து ஸ்பின்னர்கள் வரத் தொடங்கியவுடன் சாம்சனும் அடிக்க ஆரம்பித்தார். ரவி பிஷ்னோய் வீசிய ஒரு ஓவரில் இரண்டு பவுண்டரிகளைச் சிதறடித்திருப்பார்.
ஜெய்ஸ்வால் – சாம்சன் கூட்டணி அரைசதத்தைக் கடந்தது. அதற்கு மேல் அவர்களால் இந்தக் கூட்டணியை நீட்டிக்க முடியவில்லை. ஹோல்டரின் ஓவரில் 32 ரன்களில் சாம்சன் அவுட் ஆகி வெளியேறினார். நம்பர் 4-ல் படிக்கல் இறங்கினார். படிக்கல் அடிப்படையில் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன். ஆனால், இந்த சீசனில் அவருக்கு எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கேற்ற வகையில் தகவமைத்துக் கொண்டு கலக்கி வருகிறார். இங்கே நம்பர் 4-ல் வந்து மிடில் ஓவர்களில் ரன்ரேட் விழாதவாறு அதிரடியில் இறங்கினார்.