2024 நாடாளுமன்ற தேர்தலின் அரையிறுதி போட்டியாக கருதப்படும் 2023ல் 9 மாநிலங்களின் பேரவை தேர்தல் எப்போது?: அரசியல் தலைவர்களின் புது வியூகங்களால் பரபரப்பு

Share

புதுடெல்லி: வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படும் இந்தாண்டுக்கான ஒன்பது மாநில தேர்தல்கள் உள்ளன. அதனால் அரசியல் தலைவர்கள் தங்களது தேர்தல் வியூகங்கள் குறித்து பேசிவருகின்றனர். இன்று 2023 புத்தாண்டு தொடங்கிய நிலையில் இந்தாண்டுக்கான அரசியல் வியூகங்களும் பின்தொடர்கின்றன.

இந்தாண்டு மட்டும் 9 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பின் 2024ல் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும். அதனால் இந்தாண்டு நடைபெறும் 9 மாநில தேர்தல்களும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதன்படி வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறும்.

வரும் நவம்பர் மாதத்திற்குள் மிசோரமிலும் தேர்தல் நடைபெறும். திரிபுராவில் ஐபிஎஃப்டியுடன் கூட்டணியுடனும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் மாநில கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடத்தி வருகிறது.

தென்மாநிலங்களில் பாஜகவின் ஒரே கோட்டையான கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே போட்டி இருக்கும். மதச்சார்பற்ற ஜனதா தளம் தெற்கு கர்நாடகாவின் சில பகுதிகளில் வலுவாக இருப்பதால், சில இடங்களில் கடுமையான மும்முனை போட்டி இருக்கும். மற்றொரு தென்மாநிலமான தெலங்கானாவில் வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்.

இங்கு ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி – பாஜக – காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருக்கும். அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் பேரவை தேர்தல் நடைபெறும். ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருக்கும். மேலும் சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி ஆளும் காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் பேரவை தேர்தல் நடைபெறும். ராஜஸ்தானில் அசோக் கெலாட் – சச்சின் பைலட் இடையே நடந்து வரும் சண்டையின் காரணமாக, இம்மாநில தேர்தல் முக்கிய கவனம் பெற்றுள்ளது.

மேற்கண்ட ஒன்பது மாநிலங்களில்  மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பாஜகவும், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரசும், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி நடத்தி வருகிறது. மேற்கண்ட 9 மாநிலங்களில் 116 மக்களவை தொகுதிகள் உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முக்கியமான தேர்தலாக இருக்கும். எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும் கூட, அதற்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒருபகுதியாக எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக யாராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவாதங்களை அரசியல் தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com