சென்னை: தமிழர் நலனுக்கு எதிரானவர்களின் பிரிவினை அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி: நாட்டின் பல மாநிலங்களைப் போலவே, தமிழகத்தின் நிதியும் கடினமான காலங்களை சந்திக்கிறது. நிதி நெருக்கடியை திமுக அரசு எப்படி சமாளிக்கிறது? அதிமுகவின் திறமையற்ற ஆட்சி தமிழகத்தை நிதி நெருக்கடி நிலைக்கு தள்ளியது. தமிழகத்தை கடன் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலமாக மாற்றினார்கள். 2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைளால்,கடனில் இருந்து மாநிலம் படிப்படியாக மீண்டு வருகிறது. முதலீடுகளை கொண்டு வருவதற்கும், வரி வருவாயை அதிகரிப்பதற்கும், உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், மாநிலத்தை மீண்டும் அதன் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அதில் வெற்றியும் பெற்று வருகிறோம். இருப்பினும், எங்களது ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைப் பெற நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தியாவின் வளர்ச்சி அதன் மாநிலங்களின் வளர்ச்சியில் உள்ளது. அதுதான் நாங்கள் விரும்பும் உண்மையான கூட்டாட்சி.தமிழ்நாட்டின் கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் 26.94 சதவீதம் அதிகமாக உள்ளது என்று சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அரசு எவ்வாறு வரவு, செலவுகளை சமாளிக்கும்? தமிழக நிதி அமைச்சகம் சிறப்பாக செயல்பட்டு மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளது. ஆனால் இன்னும் பல சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. தமிழ்நாடு, முழுமையான வளர்ச்சிக்கு பெயர் பெற்றது. 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அந்த குழுவின் பரிந்துரைகள் எங்களுக்கு உதவுகிறது. திமுக அரசின் நிதி நிர்வாகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி தற்போது முழு வீச்சில் உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தை வருவாய் உபரி மாநிலமாக மாற்றுவோம்.சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு போன்ற அரசின் நடவடிக்கையை தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக விமர்சித்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன? முந்தைய ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திறமையின்மையும், தவறான நிர்வாகமும் தான் மக்களை பெரிதும் பாதித்தது. தனது தவறான ஆட்சியை மறைக்க, அவர் உளறுகிறார். ஒன்றிய அரசின் கடன் வழங்கும் நிறுவனங்களின் தொடர்ச்சியான அழுத்தமே மின் கட்டண உயர்வுக்கு வழிவகுத்தது. கடந்த அ.தி.மு.க., அரசின் தவறான ஆட்சியால், தமிழ்நாடு மின்சார வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தாலும், மக்கள் நலன் கருதி, பெயரளவில் மட்டுமே கட்டணத்தை உயர்த்தியுள்ளோம்.24 ஆண்டுகளுக்குப் பிறகு சொத்து வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரியை உயர்த்தினால் மட்டுமே ஒன்றிய அரசின் நிதி கிடைக்கும் என்பதால், 15வது நிதிக் கமிஷன் வழிகாட்டுதலின்படி இது செயல்படுத்தப்பட்டது. சிறந்த சாலைகள், தெருவிளக்குகள், பூங்காக்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் மூலம் மீண்டும் மக்களுக்கு பலன் கிடைக்கும். நான் முதல்வராக பதவியேற்ற அன்றே ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தோம். வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பிரீமியம் பாலின் விலையை மட்டுமே இப்போது உயர்த்தியுள்ளோம். எனவே, பழனிசாமியின் விமர்சனத்தில் தண்ணீர் இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றுவதில் திமுக அரசு காலதாமதம் செய்து வருவதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி விமர்சித்துள்ளது குறித்து உங்கள் கருத்து? கோயம்புத்தூரில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக ஆளுநர் ரவி கூறிய கருத்து முற்றிலும் தேவையற்றது. சம்பவம் நடந்த மூன்று நாட்களில் தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கை ஒப்படைத்தோம். இதேபோன்ற வழக்குக்காக கர்நாடக அரசு ஆறு நாட்கள் எடுத்துக் கொண்டது. 15 நாட்களுக்குள் என்ஐஏவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. தமிழக மக்களுக்காக நான் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளது. இதனால், கவர்னரின் சூழ்ச்சி பற்றி மக்களே அறிந்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன். திமுகவை எதிர்க்கும் பல வலதுசாரி சார்பு சமூக ஊடகங்கள் உங்கள் கட்சியுடன் தொடர்புடைய திராவிட மாடல் ஆட்சியை தாக்கியுள்ளன. இதை எப்படி பார்க்கிறீர்கள்?ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் எப்போதும் வரவேற்கிறேன். மக்களுக்கும், மாநிலத்துக்கும் நான் சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் ‘‘நான் திராவிடன்” என்று முழங்கினார். அதையே மீண்டும் வலியுறுத்துகிறோம். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று கூறிய அண்ணாவின் அடிச்சுவடுகளை பின்பற்றி என் அரசு செயல்படும். அண்ணா, கலைஞர் தலைமையிலான திராவிட இயக்கம்தான் நவீன தமிழகத்தை செதுக்கியது. இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, மதசார்பின்மை சீர்குலைப்பு போன்ற தமிழர் நலன்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் திசை திருப்பும் தந்திரங்களிலும், போலி பிரசாரத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் இதுபோன்ற பிரிவினை அரசியலுக்கு முக்கியத்துவம் தந்ததில்லை. அது தமிழகத்தில் எடுபடாது. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம், தமிழகம் சரியான பாதையில் பயணிக்கிறது என்பதையே பிற்போக்கு வலதுசாரிகள் தரப்பில் இருந்து வரும் விமர்சனங்கள் காட்டுகின்றன.
தமிழர் நலனுக்கு எதிரானவர்களின் பிரிவினை அரசியல் தமிழகத்தில் எடுபடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
Share
