2025-ல் தன் முதல் கோலை பதிவு செய்த ரொனால்டோ: அல் நசர் கிளப் வெற்றி! | ronaldo scored his first goal in 2025 al nassr won

Share

ரியாத்: 2025-ல் தனது முதல் கோலை பதிவு செய்தார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப் அணிக்காக விளையாடிய போது இந்த கோலை அவர் பதிவு செய்தார். கிளப் மற்றும் தேசிய அளவில் இது அவரது 917-வது கோல்.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை கடந்த 2023-ல் ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது அல் நசர் கிளப் அணி. அவர் இந்த ஆண்டு ஜூன் வரையில் அல் நசர் அணியோடு விளையாடும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் வியாழக்கிழமை அன்று ரியாத் நகரில் சவுதி புரோ லீக் தொடரில் அல் ஓக்தூத் அணியுடனான போட்டியில் ரொனால்டோ விளையாடினார். இதில் எதிரணி 8-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றது. இருப்பினும் அதற்கான பதில் கோலை அல் நசர் அணி வீரர் சாடியோ மானே 29-வது நிமிடத்தில் பதிவு செய்தார்.

தொடர்ந்து 42-வது நிமிடத்தில் அல் நசருக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தார் ரொனால்டோ. இதன் மூலம் தனித்துவ வரலாற்று சாதனையை அவர் படைத்தார். கடந்த 2002 முதல் தொழில்முறை கால்பந்தாட்ட களத்தில் தொடர்ச்சியாக 24 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் கோல் பதிவு செய்து அசத்தியுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் கிளப் மற்றும் தேசிய அணிக்காக விளையாடி 43 கோல்களை பதிவு செய்திருந்தார். அதற்கு முந்தைய ஆண்டில் 54 கோல்களை பதிவு செய்திருந்தார்.

இந்த செனகல் நாட்டை சேர்ந்த சாடியோ மானே 88-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை பதிவு செய்தார். இதன் மூலம் 3-1 என்ற கோல் கணக்கில் அல் நசர் வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் ரொனால்டோ பதிவு செய்த முதல் கோலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‘ஆயிரம் கோல்களை நோக்கி அபூர்வ வீரர்’ என அவரை போற்றி வருகின்றனர். அடுத்த மாதம் அவர் 40 வயதை எட்ட உள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com