சென்னை: இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த டி.குகேஷுக்கு 2024-ம் ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று சாதனை படைத்த அவர், ஆண்டின் இறுதியில் சீன வீரர் டிங் லிலெனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். இதையடுத்து அவருக்கு விளையாட்டின் உயர்ந்த விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் செஸ் டாட்காம் இணையதளம் குகேஷ், 2024-ம் ஆண்டில் பரிசுத் தொகையாக 15,77,842 அமெரிக்க டாலர்களைப் பெற்றதாகவும் இது தோராயமாக ரூ.13.6 கோடி ரூபாய்க்கு சமம் என தகவல் வெளியிட்டுள்ளது. இதில் தமிழக அரசு அறிவித்த ரூ.5 கோடி சேர்க்கப்படவில்லை. கேண்டிடேட்ஸ் தொடரில் குகேஷ் வெற்றி பெற்றதற்காக வேலம்மாள் பள்ளி விலை உயர்ந்த சொகுசு காரரை பரிசாக வழங்கியிருந்தது. 2024-ம் ஆண்டில் குகேஷ் 8 பெரிய தொடர்களில் விளையாடி இருந்தார்.
அமெரிக்க அதிபர் ஆண்டுக்கு 4,00,000 அமெரிக்க டாலர்களை வருமானமாக பெறுகிறார். அத்துடன் செலவுகளுக்காக 50,000 டாலர், பயணக் கணக்கிற்கு 1,00,000 டாலர் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களுக்காக 19,000 டாலர் பெறுகிறார். அவருடன் (5,01900 டாலர்கள்) ஒப்பிடும் போது குகேஷ் (15,77,842 டாலர்கள்) இரு மடங்கு அதிகமான தொகையை பரிசாக பெற்றுள்ளார்.
குகேஷுக்கு அடுத்த படியாக டிங் லிரென் ரூ.9.90 கோடியை பரிசாக பெற்றுள்ளார். இந்த பட்டியலில் பிரக்ஞானந்தா சுமார் ரூ.1.74 கோடியுடன் 9-வது இடத்தில் உள்ளார். முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ரூ.5.45 கோடியுடன் 4-வது இடம் வகிக்கிறார்.