துபாய்: 2024-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி-யின் சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வென்றுள்ளார்.
31 வயதான பும்ரா, நேற்று முன்தினம் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். முன்னதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட சிறந்த டெஸ்ட் அணியிலும் பும்ரா இடம் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டிருந்தார். திறன், துல்லியத்தன்மை, தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் திறன் ஆகியவை அவருக்கு ஐசிசி-யின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றுத் தந்துள்ளது.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் விருதினை வெல்லும் 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். ராகுல் திராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), ரவிச்சந்திரன் அஸ்வின் (2016), விராட் கோலி (2017, 2018) ஆகியோரும் இந்த விருதினை வென்றுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் பும்ராவின் செயல்திறன் பிரதிபலித்தது. அவர், 900 புள்ளிகளைக் கடந்து, சாதனை படைத்ததுடன் ஆண்டின் இறுதியில் 907 புள்ளிகளுடன் நிறைவு செய்தார். தரவரிசை பட்டியலில் இதற்கு முன்னர் எந்த இந்திய பந்துவீச்சாளரும் இந்த அளவுக்கு புள்ளிகளை குவித்தது இல்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் பும்ரா 15 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்குவகித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். ஒட்டுமொத்தமாக அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 77 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.