இந்திய அணியில் மீண்டும் நுழைவதற்காக 2015-ம் ஆண்டு முதலே தான் ஒரே ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்வதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அங்கும் டெஸ்ட் தோல்விகளைக் கண்டது பகுதியளவில் முகமது ஷமி இல்லாததால்தான். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் கர்ஜனையுடன் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்த வேகப்பந்து சிங்கம்.
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்தில் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஷமி, “5-6 கிலோ அல்ல, 9 கிலோ எடையைக் குறைத்துள்ளேன். பெரிய சவால் தான். நமக்கு நாமே சவால் ஏற்படுத்திக் கொள்வது மிகக் கடினம். தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தபோது என் உடல் எடை கிட்டத்தட்ட 90 கிலோ இருந்தது. ஆரோக்கியமற்ற உணவை உண்பதற்கான ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இனிப்புகள் சாப்பிட மாட்டேன்.
2015 முதல் நான் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக காலை உணவையும், மதிய உணவையும் தவிர்த்து வருகிறேன். இதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது மிக மிகக் கடினம். ஆனால் இதற்குப் பழகிவிட்டோம் என்றால் பலன் அதிகம்” என்று கூறினார் முகமது ஷமி.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்: இன்று துபாய் ஸ்டேடியத்தில் இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெறுகிறது. கடந்த முறை 2017-ல் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தியது, ஆனால், 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தோல்வி கண்டது. மே.இ.தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பையிலும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி கண்டுள்ளது.
இந்நிலையில், முகமது ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பி பழைய பவுலிங்கிற்குத் திரும்பிக் கொண்டிருப்பது பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தலே. பாகிஸ்தான் துபாயில் நிறைய விளையாடி அனுபவம் பெற்றவர்கள். இந்திய அணி அன்று வங்கதேசத்திற்கு எதிராக ஷுப்மன் கில்லின் நிதானமான ஆட்டத்தினால் வெற்றி பெற்றது. ராகுலுக்கு அந்தக் கேட்சை ஜாகிர் அலி எடுத்திருந்தால், இந்திய அணி 228 ரன்களை விரட்ட திணறியிருக்கும்.
எனவே, டாஸ் வென்று முதலில் பேட் செய்ய வேண்டிய பிட்சாக இருக்கும். ஏனெனில் போகப்போக மிகவும் மந்தமாகி மட்டைக்கே பந்து தாமதமாக வந்து டைமிங் பெரிய அளவில் பிரச்சனையாக இருக்கும் என்று தெரிகிறது.
பாகிஸ்தான் அணியில் இடது கை வீரர்கள் இருப்பதனால் குல்தீப் யாதவ்விற்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது வருண் சக்ரவர்த்தி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.