சனிக்கிழமையன்று இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தது உலகம் முழுவதும் பேசுபொருளானது. சர்வதேச ஊடகங்களின் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் இதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. நஸ்ரல்லாவின் மரணம் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலை புதிய கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெஸ்பொலா தலைவரின் மரணத்திற்குப் பிறகு, இதற்காக எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பதை இரானின் பிரதிநிதிகள் முடிவு செய்ய வேண்டும் என்று அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது அமைப்பின் மூத்த தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்தை கடந்த சனிக்கிழமையன்று ஹெஸ்பொலா ஆயுதக்குழு உறுதிப்படுத்தியது.
காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்பொலா மற்றும் ஏமனில் ஹூத்திகள் ஆகியோரை முன் வரிசையில் கொண்டு இஸ்ரேலுடனான அதன் போரில் போரிட இரான் நீண்ட காலமாக முயன்று வருகிறது.
“இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கும் அதே வேளையில், கடந்த மாதம் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கும் இஸ்ரேலுக்கு எதிராக, இரானின் தலைவர்கள் எந்த நேரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களுக்குப் பிறகு காஸாவில் போர் தொடங்கியது. அதன் பின், ஹெஸ்பொலா இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியபோது இவ்விருவருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதனால் “இரு நாடுகளிலும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்” என்று நியூயார்க் டைம்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நஸ்ரல்லா இறந்ததற்கு கண்ணீர் சிந்திய மக்கள்
நியூயார்க் டைம்ஸ் செய்திப்படி, ஹசன் நஸ்ரல்லா 1992 முதல் ஹெஸ்பொல்லாவை வழிநடத்தும் இஸ்லாமின் ஷியா மதக் குழுவிவின் தலைவராக இருந்தார். லெபனான் நாடாளுமன்றத்தில் பொறுப்பு கொண்ட ஒரு செல்வாக்குமிக்க அரசியல் கட்சியாகவும் ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டிரோன்கள் ஆகியவற்றின் பெரும் கையிருப்பைக் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த ஆயுதக்குழுவாகவும் ஹெஸ்பொல்லா வளர்வதை அவர் கண்டார்.
“அவரது மரணத்திற்குப் பிறகு, பெய்ரூட் நகரின் மையத்தில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படப் பெருந்திரளான மக்கள் அழுதுகொண்டிருப்பதைக் காண முடிந்ததாக” தி வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
நீண்டகாலமாக ஹெஸ்பொல்லா தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை லெபனானை உலுக்கியுள்ளது என்றும், அவரது மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஹெஸ்பொலா ஆயுதக் குழு போராட வேண்டியிருக்கலாம் என்றும் தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கூறியுள்ளது.
இஸ்ரேலுடனான ஹெஸ்பொலாவின் மோதல் நிச்சயமற்ற மற்றும் மிகவும் வன்முறையான பாதையை நோக்கியதாக உள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
“லெபனானில் நடந்த தீவிர குண்டுவெடிப்பு மற்றும் கொலைகள், ஹெஸ்பொலாவை முழுமையாக அகற்றுவதற்கான இஸ்ரேல் செய்யும் முயற்சியைக் காட்டுகிறது” என்று நஸ்ரல்லாவின் படுகொலை பற்றிய பகுப்பாய்வுக் கட்டுரையில் சத்தம் ஹவுஸில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா திட்டத்தின் இயக்குநரான இருக்கும் சனம் வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
தாகுத்தலைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த அமெரிக்கா
“நஸ்ரல்லாவின் படுகொலைக்கு முன்பே ஹெஸ்பொலா பல சிக்கல்களை அனுபவித்துள்ளது, புதிய தலைமையின் கீழ் இந்த இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்படலாம்”, என்று கலிபோர்னியாவில் உள்ள கடற்படை முதுகலை பள்ளியின் தேசிய பாதுகாப்பு பேராசிரியரான அஃப்சன் ஆஸ்டோவர் கூறியுள்ளதாக அந்தக் கட்டுரையில் தி வாஷிங்டன் போஸ்ட் மேற்கோள் காட்டியுள்ளது.
சனிக்கிழமையன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்த பிறகு, இரானிடம் இருந்து நிச்சயமாக ஒரு பதிலடி வரும் என்று அமெரிக்க அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக மற்றொரு செய்தியில் வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.
நஸ்ரல்லாவை கொல்ல இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தப் போகிறது என்பது தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுவதை அடுத்து, அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
லெபனான் மீது தரைவழித் தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும், அது ஹெஸ்பொலாவின் நிலைப்பாட்டை நாட்டிற்குள் பலவீனப்படுத்தும் முயற்சியைக் கடினமாக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலுக்கு அறிவுறுத்தி வருவதாக மூத்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கூறியுள்ளது.
‘இனப்படுகொலை’ என்று கூறும் துருக்கி
நஸ்ரல்லா கொலை குறித்து பாகிஸ்தானின் ஆங்கில நாளிதழான ‘டான்’ விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது.
“பல தசாப்தங்களாக இஸ்ரேலுடனான மோதலில் லெபனானின் சயீத் ஹசன் நஸ்ரல்லாதான் ஹெஸ்பொலாவை வழிநடத்தி வந்தார். ஹெஸ்பொலா அந்தப் பகுதியில் உள்ள செல்வாக்குடன் பெரிய ஆயுதக் குழுவாக மாறுவதை அவர் மேற்பார்வையிட்டார் மற்றும் இரானிய ஆதரவுகொண்ட மிக முக்கியமான அரபு நபர்களில் ஒருவராக அவர் ஆனார்” என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது லெபனான், மத்திய கிழக்கு மற்றும் உலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் பெரும் இழப்பு என்றும் அவரது மரணம் எதிர்ப்பு முன்னணியை மேலும் வலுப்படுத்தும் என்று இரான் வெளியுறவுத துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறியதாக இரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது.
“இஸ்ரேலின் இந்த அரசியல் படுகொலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். லெபனானில் உடனடியாக அதன் ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும்” என்று ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாக ‘அரப் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுடன் நட்பு பாராட்டும் நாடான துருக்கி, காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. துருக்கி அதிபர் எர்துவான் லெபனானில் “இனப்படுகொலை” நடத்தப்படுவதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், ஆனால் அவர் நஸ்ரல்லாவை நேரடியாகக் குறிப்பிடவில்லை.
சிரியாவில் அரசுக்கு எதிரான குழுக்கள் கொண்டாட்டம்
ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததை சிரியாவின் வடமேற்கு நகரமான இட்லிப்-இன் தெருக்களில் மக்கள் சிலர் நடனமாடிக் கொண்டாடினர் என்று லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெலிகிராப்’ ஆங்கில நாளிதழின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
“பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பொலாவின் தலைமையகத்தின் மீது இஸ்ரேலின் தாக்குதல் பற்றிய செய்தி நகரம் முழுவதும் பரவியதும், மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.”
கடந்த 2011ஆம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்துடன் மோதலில் இருக்கும் சிரியாவின் வடமேற்கு பகுதியில் வானில் பட்டாசு வெடித்தது.
நஸ்ரல்லா அசாத்தின் முக்கியக் கூட்டாளியாகக் காணப்படுகிறார், எதிரிகள் மீதான மூர்க்கமான அடக்குமுறை மூலம் அசாத்திற்கு உதவியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
“சிரிய மக்கள் ஏன் ஹெஸ்பொலா மீதான இஸ்ரேலிய தாக்குதலைக் கொண்டாடுகிறார்கள்?” என்ற தலைப்பில் துருக்கி அரசு ஊடகமான டி.ஆர்.டி வேர்ல்ட் ஒரு செய்திக்கட்டுரையை வெளியிட்டது.
அதில், “ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை இட்லிப் பகுதியில் உள்ள சில சிரியர்கள் தெருக்களில் இறங்கிக் கொண்டாடினர். அலைமோதும் அளவுக்குக் கூட்டமாக இதை மக்கள் கொண்டாடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் 2011ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் நஸ்ரல்லா சிரிய ஆட்சியின் முக்கியக் கூட்டாளியாக இருந்தார் என்று டி.ஆர்.டி செய்தி நிறுவனம் கூறியது.
ஹெஸ்பொலாவின் தலையீடு கிளர்ச்சிக் குழுக்களால் கைப்பற்றப்பட்ட சிரியாவின் பல பகுதிகளை மீட்க அதிபர் அசாத்தின் படைகளுக்கு உதவியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.