ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்துக்கு கவுதம் கம்பீரும் ஒரு காரணம் என்று இங்கிலாந்தின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மாண்ட்டி பனேசர் சாடியுள்ளார்.
கவுதம் கம்பீருக்கு ஸ்விங் ஆகும் பந்துகளை ஆடத் தெரியாது. அவர் எப்படி பயிற்சியாளர் ஆக முடியும். ஒருநாள், டி20 என்றால் கம்பீர் சரி வருவார். ஆனால், டெஸ்ட் போட்டிக்கு விவிஎஸ் லஷ்மண் போன்ற வீரரைத்தான் பயிற்சியாளராக நியமித்திருக்க வேண்டும் என்கிறார் மாண்ட்டி பனேசர்.
இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மாண்ட்டி பனேசர் கூறியதாவது: கம்பீருக்கு பணிச்சுமை பெரிது. அவர் இப்போது பயிற்சியாளராக உருமாறி உள்ளார். இது சில சீனியர் வீரர்களை இவ்வாறு நினைக்க வைக்கலாம், ‘என்ன நம்முடன் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடியவர் வந்து இப்போது எனக்கு வந்து இப்படி ஆடு, அப்படி ஆடு என்று சொல்வதா?’ என்று நினைக்க வைக்கலாம்.
இந்த மாற்றம் கம்பீரைப் பொறுத்தவரை கடினமானது. ஏனெனில், ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் அவரே ஒன்றும் பெரிதாக ஆடவில்லையே. ஆஸ்திரேலியாவில் அவரது சராசரி 23 மட்டுமே. இங்கிலாந்திலும் அவரது சராசரி சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
ஸ்விங் ஆகும் பந்துகளை அவர் சரியாக கையாளவில்லை; அவருக்கு ஆட வரவில்லை. இப்போது அதை தேர்வாளர்கள் உணர்வார்கள். கம்பீரை சீரியஸாக கோச் என்று நினைத்து விட்டோமோ, டி20, ஒருநாள் போட்டிகளை மட்டும் அவரிடம் கொடுத்திருக்கலாமோ என்று நினைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
விவிஎஸ் லஷ்மணை பயிற்சியாளராகக் கொண்டு வாருங்கள். அல்லது அவரை கம்பீருக்கு உதவும் வகையில் பேட்டிங் பயிற்சியாளராகக் கொண்டு வாருங்கள். லஷ்மண், திராவிட் போன்றவர், அனைத்து சூழ்நிலைகளிலும் ஆடிய அனுபவ மிக்கவர்.
ஆனால், கம்பீரை உண்மையில் கோச் ஆக பிசிசிஐ சீரியஸாக எடுத்துக் கொள்கிறதா என்று தெரியவில்லை. சும்மா சொல்கிறார்கள். ஓகே கம்பீர் சொல்வதைக் கேட்போம் என்று வாயளவில் கூறுகிறார்கள். உண்மையில் அவரை சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. இவ்வாறு மாண்ட்டி பனேசர் தெரிவித்துள்ளார்.