முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷான் மசூத் 151 ரன்களும், தொடக்க வீரரான அப்துல்லா ஷபிக் 102 ரன்களும் விளாசினர்.
முல்தான் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரரான சைம் அயூப் 4 ரன்கள் எடுத்த நிலயில் கஸ் அட்கின்சன் பந்தில் விக்கெட் கீப்பர் ஜெமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷிபிக்குடன் இணைந்து பார்ட்னர் ஷிப்பை கட்டமைத்தார்.
இந்த ஜோடி ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தது. தனது 5-வது சதத்தை விளாசிய அப்துல்லா ஷபிக் 184 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசிய நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில் கவர்திசையில் நின்ற ஆலி போப்பிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத்துடன் இணைந்து 253 ரன்கள் குவித்தார் அப்பதுல்லா ஷபிக்.
அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷான் மசூத் 177 பந்துதுகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் விளாசிய நிலையில் ஜேக் லீச் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடந்து களமிறங்கிய பாபர் அஸம் 71 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 86 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது.
சவுத் ஷகீல் 35 ரன்களுடன், நசீம் ஷா ரன் எதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க பாகிஸ்தான் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.