சென்னை: “பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளனர். எனவே, யாரும் அச்சப்பட வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இனிமேல், வெளி மாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் தமிழக வீராங்கனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்,” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி, பஞ்சாப்பில் உள்ள பதின்டா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து 36 வீராங்கனைகள் சென்றுள்ளனர். அவர்களுடன் 3 மேலாளர்கள் மற்றும் 3 பயிற்றுநர்கள் சென்றுள்ளனர். இன்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பிஹார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கபடி போட்டியின்போது, தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடந்ததாக புகார் வந்தது. உடனடியாக தொலைபேசியில் அழைத்து பேசினோம்.
இந்தப் பிரச்சினையின் பேரில் பயிற்றுநர் பாண்டியராஜன் என்பவரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், இவ்விவகாரம் குறித்து தெரியவந்ததும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
போட்டி நடைபெறும்போது புள்ளிகள் தொடர்பாக ஏற்பட்ட மனக்கசப்பால் இரு அணிகளுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஒரு பதற்றமான சூழல் நிலவியிருக்கிறது. அதுதான் தொலைக்காட்சியிலும், சமூக ஊடகங்களிலும் வீடியோவாக வந்திருக்கிறது. அம்மாநில மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உடனடியாக இந்தப் பிரச்சினையை சரிசெய்திருக்கிறோம். மேலும் இன்றே நமது வீராங்கனைகள் அனைவரையும் பதின்டாவில் இருந்து டெல்லி அழைத்துச் செல்லவும், பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.
அதேபோல், கைது செய்யப்பட்டிருந்த பயிற்றுநர் பாண்டியராஜனையும் காவல் துறையினர் விடுவித்துவிட்டனர். இன்று நள்ளிரவு டெல்லி செல்லும் தமிழக அணியினர் டெல்லி இல்லத்தில் தங்கவைக்கவும், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய முதல்வரின் உத்தரவின்பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் உடன் சென்றுள்ள உடற்கல்வி இயக்குநர் கலையரசி என்பவரோடு நான் தொலைபேசியில் பேசிவிட்டேன். எந்தவிதமான பதற்றமும் இல்லை. வீராங்கனைகள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளனர். எனவே, யாரும் அச்சப்பட வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
போட்டியின் போது புள்ளிகள் பெறுவதில் இரு அணிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, சின்ன தள்ளுமுள்ளு நடந்துள்ளது. யாருக்கு பெரிய அடி எதுவும் இல்லை. சின்ன சின்ன சிராய்ப்புகள் தான் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு எல்லாம் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. காயங்கள் எல்லாம் முதலுதவிப் பெட்டிகளில் உள்ள பொருட்களைக் கொண்டே சரிசெய்யப்பட்டுள்ளது. அனைத்து வீராங்கனைகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
தற்போது சென்றுள்ள வீராங்கனைகள் உடன் உடற்கல்வி இயக்குநர்கள், பயிற்றுநர்கள் உடன் சென்றுள்ளனர். எப்போதாவது இதுபோல ஒன்றிரண்டு சம்பவங்கள் நடக்கிறது. ஏற்கெனவே உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இனிமேல் வெளி மாநிலங்களுக்கு விளையாடச் செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று அமைச்சர் உதயநிதி கூறினார். | வாசிக்க > பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்