விழுப்புரம்: பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி வால்! – மருத்துவர்கள் பரிசோதனை | Villupuram: Lizard’s tail in Chief Minister’s breakfast program!

Share

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ள ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 52 மாணவ மாணவிகளிடம் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆணைவாரி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 67 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஜூன் 24ஆம் தேதி 8 மணி அளவில் எப்பொழுதும் போல் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவுகளை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சமையலர்கள் சசிகலா மற்றும் கலைச்செல்வி ஆகியோர் வழங்கியுள்ளனர்.

கடைசியாக பாத்திரத்தில் இருந்த உணவை வழங்கும்போது பல்லியின் வால் இருப்பதை கவனித்துள்ளனர். இந்த தகவலை உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலுவிடம் சமையலர்கள் சசிகலா மற்றும் கலைச்செல்வி ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர்.

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவ மாணவியரிடம் உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தகவலை அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இந்திராதேவி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆனந்த சக்திவேல் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி தலைமை ஆசிரியர், சமையலர், மாணவ மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தமிழ்ச்செல்வி தலைமையிலான மருத்துவ குழுவினர் பள்ளி மாணவ மாணவிகளிடம் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மருத்துவ குழுவினர், அதிகாரிகள் தொடர்ந்து மாணவ மாணவிகளை கண்காணித்து வந்தனர்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆனந்த சக்திவேல் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டுள்ளதாகவும், அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி இந்தப் பள்ளியின் சமையலர்கள் சசிகலா மற்றும் கலைச்செல்வி ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி மாணவர்களை பரிசோதனை செய்து அதன் அறிக்கையை மாவட்ட அலுவலர் செந்திலுக்கு அனுப்பி வைத்தார். மேலும் உணவு மற்றும் சாம்பார் மாதிரிகளை எடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com