விருப்பத்துடன் பாலியல் உறவு; ஆணுக்கு மட்டும் தண்டனை – சட்டபூர்வ வயதில் என்னதான் சிக்கல்?

Share

வளரிளம் பருவத்தினருக்கு இடையேயான பாலியல் உறவை குற்றமாகக் கருதுகிற விவாதம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில், கடந்த மாத இறுதியில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ”இந்தியாவில் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினருக்கு இடையேயான சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுகள், சுரண்டல் அல்லது வன்கொடுமைகள் அல்ல. இதுபோன்ற வழக்குகள் குற்றவியல் வழக்குகளின் வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.

வயது அடிப்படையிலான சட்டங்களின் குறிக்கோள், குழந்தைகளை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும், ஒருமித்த மற்றும் வயதுக்கு ஏற்ற உறவுகளை குற்றமாக்குவதாக இருக்கக்கூடாது” என வாதிட, இந்த விவாதம் மறுபடி அனல் பறக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சட்ட விவகாரம் தொடர்பாக கடந்த 10 வருடங்களாக குரல் எழுப்பி வரும் வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்களிடம் பேசினோம்.

Teen age Love, Sex and Pocso
Teen age Love, Sex and Pocso

”18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்தால், அது போக்சோ சட்டத்தின் கீழ் வரும். ஆனால், 18 வயது வரைக்கும் அந்தப் பருவத்துக்கே உரிய பாலியல் உணர்வுகளை எல்லோராலும் நிறுத்தி வைக்க முடியாது. ஏனென்றால், அது இயற்கை. வளரிளம் பருவத்திலேயே ஆணுக்கும், பெண்ணுக்குமான ஈர்ப்பு தொடங்கி விடுகிறது. இதற்கு சமூகமும், குடும்பமும் வெவ்வேறு வழிகளில் தடைபோடும். என்றாலும், அவர்களுடைய வயது, ஹார்மோன், மனம், சூழல் என பல காரணிகள் அவர்களுடைய பாலியல் உணர்வுகளை கட்டவிழ்த்து விடலாம்.

இப்படியொரு சூழலில், 18 வயதுக்குக் கீழ் இருக்கிற ஒரு வளரிளம் ஆணும், ஒரு வளரிளம் பெண்ணும் மனமொத்து உடலுறவு கொண்டுவிட்டால்… பெற்றோர்கள் அதை காவல்துறையில் புகார் செய்யும்பட்சத்தில், உறவுகொண்ட அந்தப்பெண் 18 வயதுக்குக் கீழ் இருப்பதால், அந்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வந்துவிடும். விளைவு, மனமொத்து உடலுறவு கொண்ட இருவரில் ஆண் குற்றவாளியாகவும், பெண் பாதிக்கப்பட்டவளாகவும் ஆகிவிடுகிறார்கள். இருவரும் விருப்பப்பட்டே உறவு கொண்டிருக்கும்பட்சத்தில், எதற்காக அந்தப் பையன் மட்டும் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிட்ட அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் வருங்கால தலைமை நீதிபதியான ஜஸ்டிஸ் நாகரத்தினாவும், ஒரு வழக்கின் தீர்ப்பை எழுதுகையில் இந்த வாசகத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே மனமொத்து நடக்கிற பாலியல் உறவை குற்றமாகக் கருதக்கூடாது. அதற்கு ஏற்றபடி, நம்முடைய சட்டத்தைத் திருத்த வேண்டும் என்கிற ஓர் ஆலோசனையை இந்திய அரசுக்கு அவர் வழங்கியிருக்கிறார்.

சட்டத்தைத் திருத்த வேண்டுமென்றால், இவர்கள் போக்சோ சட்டத்துக்குள் வர முடியாது. ஏனென்றால், போக்சோ சட்டத்தைத் தவிர்க்க முடியாது” என்கிற சாந்தகுமாரி, எது பாலியல் வன்கொடுமை என்பதையும் விவரிக்க ஆரம்பித்தார்.

வழக்கறிஞர் சாந்தகுமாரி!

”பெண்ணின் விருப்பமில்லாமல் உறவுகொள்வது; பெண்ணைக் கட்டாயப்படுத்தி உறவுகொள்வது; திருமணம் செய்துகொள்வோம் என்கிற பொய்யான நம்பிக்கைக்கொடுத்து அவளை ஏமாற்றி உறவுகொள்வதுதான் பாலியல் வன்கொடுமை. ஆனால், இந்த விஷயத்தில் அந்த வளரிளம் ஆண், அந்த வளரிளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்யவில்லை. அப்படியென்றால், அந்த வளரிளம் ஆண் எதற்காக தண்டனைக்குள்ளாக வேண்டும்? அதனால்தான், இதை பெரிய குற்றமாகக் கருதாமல், அவர்களுடைய வயது, இருவருடைய சம்மதம், ஒத்துழைப்பு இவற்றின் அடிப்படையில்தான் இதுபோன்ற வழக்குகளை அணுக வேண்டும் என்கிறோம். இதைவிடுத்து, அந்த வளரிளம் ஆணுக்கு 10 வருடம் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை தீர்ப்பாக வழங்கினால், அவனின் எதிர்காலமே அழிந்துவிடும். பருவ வயதுக்கான உணர்வை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

வளரிளம் பருவத்தினரின் மனமொத்த உடலுறவை சட்டம் குற்றமாக அணுகும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டு விடும். ஆனால், சம்பந்தப்பட்ட ஆண் தண்டனைக்குரிய குற்றவாளியாக்கப்படுவதால், அவனை சமூகமும் நிராகரித்து விடும். அவன் வாழ்வும் கேள்விக்குறியாகி விடும். அதனால், இந்த விஷயத்தை சட்டம் வேறுவிதமான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.

Law (Representational Image)

சமீபத்தில், அகில இந்திய அளவில் பெண் வழக்கறிஞர்கள் இணைந்து செமினார் ஒன்றை நடத்தினோம். அப்போது, அனைத்து பெண் வழக்கறிஞர்களுமே, ‘சம்மதத்துடன் உறவுகொள்கையில் வளரிளம் ஆணை குற்றவாளியாக்கக்கூடாது’ என்றே வலியுறுத்தினோம். அதனால், இந்த விஷயத்தில் சட்டத்திருத்தம் அவசியம். இதன்படி, இருவரும் மைனர்களாக இருக்கலாம்; ஆண் 18 வயது நிறைவுபெற்றவனாகவும் இருக்கலாம். ஆனால், இருவரும் காதலித்து, பரஸ்பர சம்மதத்துடன் உறவுகொண்டால் அது குற்றம் ஆகாது. அதில் சம்பந்தப்பட்ட ஆண் குற்றவாளி இல்லை என சட்டம் கொண்டு வரச் சொல்கிறோம்.

கடந்த 10 வருடங்களாக இதுகுறித்த கலந்துரையாடல்கள், அரசாங்கத்தோடும், மாநில சட்ட ஆணையத்தோடும், அகில இந்திய சட்ட வாரியத்தோடும் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. அதுபற்றிய தீர்மானங்களை நிறைவேற்றி, அந்தப் பரிந்துரையை சட்ட கமிஷனுக்கும் அனுப்பி இருக்கிறோம். ஆனால், இன்னும் எதுவுமே நிகழவில்லை என்பதுதான் வேதனை” என்கிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

Teen age Love, Sex and Pocso

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com