இன்னும் ஒரு வழக்கம் மேற்கொண்டேன். அலுவலகத்தில் ஏதாவது ஒரு நிகழ்வின் போது ஸ்வீட் காரம் கொடுப்பார்கள் அல்லவா.. முடிந்த வரை அதை முழுதாக வீட்டுக்கு எடுத்து வந்து எல்லோரும் ஆளுக்குச் சிறிது எனப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் தான் அது. அதில் குழந்தைகள் விரும்பினால் அவர்களுக்குத் தானே அதிகம் கொடுப்போம்… இதன் பிறகு அவரும் அதே மாதிரி கொண்டு வர ஆரம்பித்தார். அப்படியே வெளியில் இனிப்பு ஏதேனும் சாப்பிட்டிருந்தால் கூட என்னிடம் சொல்வதும் இயல்பாகி விட்டது.
என் பெரிய மகன் ரொம்பச் சின்ன வயதில் இருந்தே நானே ஆச்சரியப்படுகிற மாதிரி இனிப்பு வகைகளில் அவ்வளவு ஆர்வம் இல்லாதிருந்தான் . காரம் சார்ந்த பலகாரங்களே அவன் விருப்பமாக இருந்தது. அதுபோக அவன் படு விஷமம். பொறுமையே இருக்காது. ஒவ்வொரு முறை இனிப்பு எது உண்டாலும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும் என்று சொல்வோம். பழைய கால முறைப்படி கட்டின வீடு என்பதால் பக்கம் பக்கமாக வாஷ் பேசின் டாய்லெட் எல்லாம் இருக்காது. பின்பக்கம் தான் சென்று வர வேண்டும் ஆதலால் அதற்குக் கூடப் பொறுமை இல்லாமல் ஸ்வீட் வேண்டாம் எனக்கு என்று சொல்லி விடுவான். .
என் அப்பா அல்வாவிலேயே ஒரு கை சீனி கலந்து சாப்பிடுவார். ( கடைசி வரை நீரிழிவு தலை காட்டவில்லையே… அம்மாவுக்கும் அக்காவுக்கும் மட்டும் அந்த வரம் வாய்க்கவில்லை) . சிறியவன் அதைப் போல் நாட்டத்துடன் இருந்து வளர வளர நன்மை கருதித் தவிர்க்க ஆரம்பித்து விட்டான். இப்போது நாற்பதைத் தாண்டி விட்ட இருவரும் இன்று வரை தப்பித்து ஆனால் தகுந்த இடைவெளிகளில் நீரிழிவுக்கு உண்டான சோதனை மட்டும் செய்து கொள்கிறார்கள். அன்று அவர்களுக்கு அளித்த உணவையே இன்று அவர்களும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் புரட்டுவோம் இந்த இனிய போராட்டத்தின் வேறு பக்கங்களை…
-மீனாக்ஷி மோஹன்
ஹைதராபாத்