கழிவறைக்குச் சென்ற குழந்தை வராததால், அந்த ஆசிரியை குழந்தையை தேடிப் போனார். கழிவறையில் குழந்தை இல்லாததால் அதை சுற்றி தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததால் அங்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது குழந்தை அதற்குள் கிடந்ததால், மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினோம்” என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறது பள்ளி நிர்வாகம். அதேசமயம், “குழந்தையை காணவில்லை என்றால் உடனே தேடிப்பார்க்க வேண்டும்தானே ? ஆசிரியர்கள் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருப்பார்கள் ? அதேபோல குழந்தையை காணவில்லை என்று பெற்றோருக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை ? மாலை 4 மணிக்கு குழந்தையை பெற்றோர் அழைத்து வர சென்றபோது, `லியா லட்சுமி எங்கே?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் அப்போது போலீஸாரும், வருவாய் துறையினரும் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். அப்படி என்றால் குழந்தை இறந்துவிட்டது என்று பள்ளி நிர்வாகத்துக்கு தெரியும். அதனால்தானே போலீஸாரை அழைத்திருக்கிறார்கள். ஆனால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த பள்ளி நிர்வாகம், அவ்வளவு நேரமாகியும் பெற்றோருக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. 2,000 பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பாதுகாப்பு என்பது பேச்சுக்குக் கூட இல்லை. சுற்றுச் சுவர் போடாமல், வேலியை போட்டு வைத்திருக்கிறார்கள். இத்தனை குழந்தைகள் படிக்கும் இடத்தில் செப்டிக் டேங்க்கை இந்த அளவுக்கா வைத்திருப்பார்கள் ?