பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் உலகின் தலைசிறந்த சமகால வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் செல்லப்பிள்ளையாக, அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்து கிரிக்கெட் வாழ்வே முடிந்து விட்டது என்று நினைத்த உஸ்மான் கவாஜா, இலங்கையில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாறு படைத்தார்.
உஸ்மான் கவாஜா கால்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று தன் இரட்டைச் சதத்தை எடுத்து முடித்து 232 ரன்களில் பிரபத் ஜெயசூரியாவிடம் ஆட்டமிழந்தார். இதில் 16 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும். உஸ்மான் கவாஜா தன் 200-வது ரன்னை 290-வது பந்தில் சிங்கிள் மூலம் எடுத்த போது இலங்கையில் முதல் முதலாக இரட்டைச் சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
இலங்கை மண்ணில் அதிக ஸ்கோரை விளாசியப் பட்டியலில் இன்றும் முதலிடம் வகிப்பது மே.இ.தீவுகளின் முன்னாள் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்தான் இவர் 2010-ம ஆண்டு இதே கால்லே மைதானத்தில் 333 ரன்களை விளாசி வரலாற்றுச் சாதனைப் படைத்தது இன்று வரை முறியடிக்கப்படவில்லை. கிறிஸ் கெய்ல் 437 பந்துகளில் 333 ரன்களை விளாசினார். இலங்கை மண்ணில் அதிக ஸ்கோர் விளாசிய அயல்நாட்டு வீரர்கள் இதோ:
- கிறிஸ் கெய்ல் கால்லேயில் 333 ரன்கள் – 2010-ம் ஆண்டு
- ஸ்டீபன் பிளெமிங் கொழும்புவில் 274 நாட் அவுட், 2003
- ஜோ ரூட் 228 ரன்கள் கால்லே.- 2021
- பிரையன் லாரா 221 – கொழும்பு 2001
- சவுத் ஷகீல் (பாகிஸ்தான்), 208 நாட் அவுட் கால்லே – 2023
- சச்சின் டெண்டுல்கர், கொழும்பு, 203 – 2010
- அப்துல்லா ஷபீக் 201, கொழும்பு – 2023
- தற்போது உஸ்மான் கவாஜா, 232, கால்லே – 2025
கவாஜாவுக்கு முன்னர் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் 166 ரன்களை இலங்கை மண்ணில் குவித்ததுதான் ஆஸ்திரேலிய வீரரின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். இவர் கொழும்புவில் 2004-ம் ஆண்டு இந்த ஸ்கோரை எடுத்தது குறிப்பிடத்தக்கது.