இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, அதன் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.
பிறகு, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கெதிராக டெஸ்ட் தொடரை இழந்தபோது, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் ஓய்வுபெற வேண்டும் என பேச்சுக்கள் எழுந்த இரண்டே மாதங்களில், துபாயில் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.

இவ்வாறிருக்க, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன்சியிலிருந்து ரோஹித் நீக்கப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்ட அடுத்த சில மணிநேரத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் (மே 7) ரோஹித்.
இவரின் இந்த முடிவால், ஒரு தரப்பினர் பிசிசிஐ-க்கு எதிராகக் கருத்து தெரிவிக்க, இன்னொரு தரப்பினர் ஓய்வு அவரின் தனிப்பட்ட முடிவு என்று கூறிவந்தனர்.