மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது விளையாட்டு உத்தியை மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கடைசியாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். கடந்த 3 இன்னிங்ஸ்களில் அவர் முறையே 10, 3, 6 என ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதுகுறித்து மெல்பர்னில் செய்தியாளர்களிடம் ரவி சாஸ்திரி கூறியதாவது: ரோஹித் சர்மா, கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி வருகிறார். இது அணிக்கு நல்லதல்ல. அவர் தனது விளையாட்டு உத்தியை மாற்றிக் கொள்ளவேண்டும். அவர் தொடக்க வீரராக வருவதற்குப் பதிலாக 5 அல்லது 6-ம் வரிசையில் களமிறங்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் 6-வது வரிசையில் ஏராளமான வீரர்கள் களமிறங்கி பெரும் புகழைப் பெற்றுள்ளனர்.
தொடக்க வீரராக கே.எல். ராகுலையே களமிறக்கலாம். பெர்த் டெஸ்ட் போட்டியில் அவர் 77 ரன்கள் எடுத்தார். அதைப் போலவே பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியிலும் அவர் 84 ரன்கள் எடுத்தார். 3 போட்டிகள் முடிந்த நிலையில் அவர் 2 அரை சதங்களை விளாசி தான் ஒரு அனுபவமிக்க வீரர் என்பதை ராகுல் நிரூபித்துள்ளார்.
எனவே, கேப்டன் ரோஹித் சர்மா அணியின் நலனுக்காக இதைச் செய்யவேண்டும். மேலும், அவர் ஆடுகளத்துக்குள் விளையாடுவதற்காக வரும்போது அவர் தனது மனநிலையில் தெளிவாக இருக்கவேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதிரணியின் தாக்குதலுக்குத் தயாராக இருக்கவேண்டும். விளையாட்டு உத்தியை மாற்றி அணியை வெற்றியின் பக்கம் திருப்பவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.