பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Images
டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்.
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதை 18.1 ஓவர்களில் சேஸ் செய்து வென்றது அக்ஷர் பட்டேலின் அணி.
முந்தைய போட்டியில் அரைசதம் அடித்து டெல்லியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக விளங்கிய சமீர் ரிஸ்வி, இந்தப் போட்டியிலும் அரைசதம் அடித்து தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
பௌலர்களை சிறப்பாகப் பயன்படுத்திய அக்ஷர்
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த டெல்லி கேப்டன் அக்ஷர் பட்டேல் களத்தில் சிறப்பான முடிவுகளை எடுத்தார். அதனால் பவர்பிளேவில் அந்த அணியின் கை சற்று ஓங்கியிருந்தது.
மூன்றாவது ஓவரில் ரியான் ரிக்கில்டன், திலக் வர்மா என இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் முகேஷ் குமார். அதன்பிறகு இரண்டு வலது கை பேட்டர்கள் களத்துக்குள் வந்ததும் அக்ஷர் பட்டேல் தானே நான்காவது ஓவரைப் பந்துவீச வந்தார்.
ஏற்கெனவே ஐபிஎல் அரங்கில் ரோஹித் ஷர்மாவை அவர் 3 முறை வீழ்த்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் அக்ஷருக்கு எதிராக ரோஹித்தின் ஸ்டிரைக் ரேட் 100-க்கும் குறைவாகவே இருந்தது. அதனால் அட்டாக் செய்யும் நோக்கத்தோடு பந்துவீசவந்தார் அக்ஷர். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
பட மூலாதாரம், Surjeet Yadav/MB Media/Getty Images
பொதுவாக பவர்பிளேவில் ஒரு பௌலர் நன்றாகப் பந்துவீசி விக்கெட்டுகள் எடுக்கும்போது அவருக்குத் தொடர்ச்சியாக மூன்றாவது ஓவரோ, சில சமயங்களில் தொடர்ச்சியாக நான்காவது ஓவரோ கூடக் கொடுப்பார்கள். இந்த சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி ஜேக்கப் டஃபியை அப்படிப் பயன்படுத்தியைப் பார்த்தோம்.
ஆனால், மாலையில் தொடங்கும் போட்டிகளில் இது சிலசமயம் பாதகமாகவும் அமைந்துவிடும். கடும் வெயிலில் ஓடிவந்து பந்துவீசுவதால், தொடர்ச்சியாக மூன்றாவது ஓவர் வீசும் வேகப்பந்துவீச்சாளர்கள் சற்றே சோர்வடைவார்கள். முந்தைய ஓவர்களைப்போல் அவர்களால் தாக்கம் ஏற்படுத்த முடியாமல் போகும்.
அதனால் அக்ஷர் பட்டேல் முகேஷ் குமாருக்கு மூன்றாவது ஓவர் கொடுப்பாரா என்று வர்ணனையாளர்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர். ஆனால், அக்ஷர் செய்யவில்லை. துணிந்து லெக் ஸ்பின்னர் விப்ராஜ் நிகம் கையில் பந்தைக் கொடுத்தார். ஒரு பவுண்டரி கொடுத்தாலும் அந்த ஓவரில் 7 ரன்களே கொடுத்தார் விப்ராஜ். பவர்பிளேவில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய டெல்லி அணி அந்த 6 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே கொடுத்தது.
அதன்பிறகும் அக்ஷர் சில தைரியமான முடிவுகளை எடுத்தார். இந்த சீசன் பெரும்பாலான அணிகள் ஸ்பின்னர்களை அதிகம் பயன்படுத்துவதே இல்லை. ஆனால், அக்ஷர் தன் ஸ்பின்னர்களை நன்கு பயன்படுத்தினார்.
பவர்பிளே முடிந்து அடுத்த 7 ஓவர்களும் அவர் ஸ்பின்னர்களையே பயன்படுத்தினார். நடராஜனுக்கு பௌலிங்கே கொடுக்கவில்லை என்றாலும், மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை நன்கு பயன்படுத்தினார். எதிர்பார்த்ததுபோல் ரோஹித் விக்கெட்டை அக்ஷரே வீழ்த்தியிருந்தார்.
அந்த 7 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள் டெல்லி ஸ்பின்னர்கள். சூர்யகுமார் யாதவ் போன்ற அதிரடி பேட்டர் களத்தில் இருந்தும் அந்த ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன்ரேட் 7.29 ஆகத்தான் இருந்தது. ஆடுகளத்தின் தன்மையை நன்கு உணர்ந்து பௌலர்களைப் பயன்படுத்தினார் அக்ஷர் பட்டேல்.
பட மூலாதாரம், Pankaj Nangia/Getty Images
டெத் ஓவர்களில் சோபித்த வேகப்பந்துவீச்சாளர்கள்
14வது ஓவரில் தான் முதல் முறையாக நடராஜனைப் பயன்படுத்தினார் அக்ஷர் பட்டேல். அந்த ஓவர் முதலான 7 ஓவர்களில் ஒன்றை மட்டும் குல்தீப் வீசினார். மற்ற 6 ஓவர்களையும் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே வீசினார்கள். ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து ஸ்லோயர் பால்களை போன்ற வேரியேஷன்களை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தினார்கள்.
பவர்பிளேவில் வீசிய 2 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்திருந்த லுங்கி எங்கிடி, கடைசி கட்டத்தில் வீசிய 2 ஓவர்களில் 15 ரன்கள் மட்டும் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் (தற்காலிக) கேப்டன் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் மும்பைக்காக அதிக ரன்கள் எடுத்தவர் அவர்தான்.
அதேபோல் நடராஜனும் தான் வீசிய 3 ஓவர்களில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக 19வது ஓவரில் அவர் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து நமன் தீர் விக்கெட்டைக் கைப்பற்றினார். அந்த ஓவரில் யார்க்கர், பவுன்சர், ஸ்லோ பால், ஃபுல் டாஸ் என அனைத்து விதமான வேரியேஷன்களையும் பயன்படுத்தினார் நடராஜன். முகேஷ் குமாரும் 3 ஓவர்கள் பந்துவீசி 26/2 என தன் ஸ்பெல்லை முடித்தார்.
இப்படி ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் எல்லோரும் சிறப்பாகப் பந்துவீசியதால் மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பட மூலாதாரம், Pankaj Nangia/Getty Images
தொடரும் ஓப்பனிங் சோகம்
கடந்த சீசன் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது அவர்களின் ஓப்பனிங் கூட்டணி தான். பல்வேறு வீரர்களை, பல்வேறு ஜோடிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். 14 லீக் போட்டிகளில் மொத்தம் 7 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்களைப் பயன்படுத்தியது அந்த அணி.
இந்த முறை இந்தப் பிரச்னை சரியாகும் என்று கருதப்பட்டது. கேஎல் ராகுல் – பதும் நிசங்கா வாயிலாக ஒரு நிரந்தர ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கிடைக்கும் என்று நினைத்திருக்கையில், கடந்த 2 போட்டிகளிலுமே அதற்கு நேர்மாறாகவே நடந்திருக்கிறது.
முந்தைய போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறிய கேஎல் ராகுல், இந்தப் போட்டியில் நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார்.
அடுத்த வந்த நித்திஷ் ராணாவும் அடுத்த ஓவரிலேயே ரன் அவுட் ஆனார். அதனால் 1.4 ஓவர்களில் 7/2 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது டெல்லி கேபிட்டல்ஸ்.
அந்த 2 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மற்றொரு ஓப்பனரான நிசங்கா நிலைத்து நின்று விளையாடி அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். பவர்பிளேவில் டெல்லி அடித்த 42 ரன்களில் அவரே 38 ரன்கள் எடுத்திருந்தார். 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மீண்டும் வெற்றிக்கு வித்திட்ட சமீர் ரிஸ்வி
பட மூலாதாரம், Pankaj Nangia/Getty Images
சமீர் ரிஸ்வி களமிறங்கியபோது 1.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 7 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி கேபிட்டல்ஸ். அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அணியை மீட்கும் பணியைத் தொடங்கினார் ரிஸ்வி. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் எடுத்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்த ரிஸ்வி, மீண்டும் அந்தப் பணியைச் செய்தார். முதலில் நிசங்காவுடனும் பின்னர் டேவிட் மில்லருடனும் அந்த வேலையைச் செய்தார் ரிஸ்வி.
ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக விளையாடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதில் கவனம் செலுத்தினார் ரிஸ்வி. தான் சந்தித்த முதல் 16 பந்துகளில் அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். கார்பின் பாஷ், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் பந்துவீச வந்ததும் அவர்களின் பந்துகளை அட்டாக் செய்யத் தொடங்கினார் ரிஸ்வி. குறிப்பாக ரிஸ்வி வீசிய 11வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என 20 ரன்கள் விளாசினார். மயாங்க் மார்க்கண்டே வீசிய அடுத்த ஓவரிலுமே 2 சிக்ஸர்கள் அடித்தார்.
இந்த 2 ஓவர்கள் ஆட்டத்தை டெல்லியின் பக்கம் மெல்ல எடுத்து வந்தது. பாஷ் வீசிய 11வது ஓவருக்கு முன்பாக 9ஆக இருந்த டெல்லிக்குத் தேவைப்படும் ரன்ரேட், 13வது ஓவர் முடிந்தபோது 7ஆகக் குறைந்தது.
ஒருகட்டத்தில் அவர் முழுமையான அதிரடியில் இறங்கினார். ரிஸ்வி – மில்லர் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்திருந்தபோது அதில் மில்லர் அடித்திருந்தது ஒரேயொரு ரன் மட்டுமே. அந்த அளவுக்கு இருந்தது ரிஸ்வியின் ஆதிக்கம். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரிஸ்வி, டெல்லி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். 90 ரன்கள் அடித்திருந்த அவர், வெற்றிக்கு 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அவுட் ஆனார்.
அவர் அவுட் ஆன பிறகு மில்லர், ஸ்டப்ஸ் இருவரும் டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அந்த அணி வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது டெல்லி கேபிட்டல்ஸ்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு