‘ரிஷப் பந்த் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் ஆட வேண்டும்’ – சுரேஷ் ரெய்னா | Rishabh Pant should play with responsibility Suresh Raina

Share

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் ரிஷப் பந்த் இன்னும் கொஞ்சம் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் இதுவரை 31 ஒரு போட்டிகளில் 871 ரன்களை 33.5 என்ற சராசரியில் எடுத்துள்ளார். நல்ல பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனை தேர்வுக்குப் பரிசீலிக்காமல் ஒருநாள் கிரிக்கெட் ஆடி நீண்ட நாட்கள் ஆன ரிஷப் பந்தை அஜித் அகார்க்கர் – ரோஹித் – கம்பீர் கூட்டணி தேர்வு செய்கிறது எனில் அது ரிஷப் பந்த் மீதான, அவரது திறமை மீதான நம்பிக்கை என்பதை விட வேறு காரணங்கள்தான் நம் மனதில் எழுகின்றன. அதே போல் இஷான் கிஷனும் புறமொதுக்கப்பட்டு வருகிறார்.

ரோஹித் – கம்பீர் கூட்டணி பழமைவாதிகளாக இருப்பார்கள் என்றே தோன்றுகிறது. அணியில் புதிய வீரர்களைத் தேர்வு செய்தால் எங்கே தன் இடமும் கோலி இடமும் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் தவிர இந்த செலக்‌ஷன் கோளாறுகளுக்கு வேறு காரணங்கள் இருக்க முடியுமா என்ன?

ஆனால் ரெய்னா கூற வருவது என்னவெனில், “ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங்கில் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆனால், பேட்டிங்கில் இது 50 ஓவர் கிரிக்கெட் என்பதை நினைவில் தக்க வைத்து இன்னும் கூடுதல் பொறுப்புடன் அவர் ஆட வேண்டும் என்பதே என் கோரிக்கை.

ரிஷப் பந்துக்கு 3 ஒருநாள் போட்டிகள் வாய்ப்பிருக்கிறது. எனவே இது அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அவர் ஏன் பொறுப்புடன் ஆட வேண்டும் என்று கூறுகிறேன் என்றால் 40-50 பந்துகளை அவர் சந்தித்து விட்டால் போதும் இந்தியாவுக்காக போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து விடுவார்.

குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இல்லை என்றால் ரிஷப் பந்த் ரோல் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ரிஷப் பந்த் 4-ம் நிலையில் களமிறங்க வேண்டும்.

ஹர்திக் பாண்டியாவுக்கு முன்பாக ரிஷப் பந்த் களமிறங்க வேண்டும். ஏனெனில், ரிஷப் பந்த் 40-50 பந்துகளை ஆடுகிறார் என்றால் ஆட்டத்தின் போக்கே வேறு என்பதுதான்.

நான் 50 பந்துகள் ஆடிவிட்டால் 50-100 ரன்களை விளாசுவேன் என்று ரிஷப் பந்த் தனக்குத் தானே சொல்லிக் கொள்ள வேண்டும். கிரீசில் அதிக நேரம் செலவிட வேண்டும்.

அவர் தவறிழைத்தால் அதன் விளைவுகள் மோசமாக உள்ளது. இந்திய அணியின் ஒரு புதிர் காரணி அவர். எனவே அவர் நின்றால் எதிரணியினருக்கு கிலிதான், அவர் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு கூறுகிறார் சுரேஷ் ரெய்னா.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com