காலை விடிவதும் இரவு முடிவதும் மொபைல் போனில் என பலரின் வாழ்க்கை போனோடு நெருங்கி இருக்கிறது.
இந்த நெருக்கம், மனித முகங்களையும், அவர்கள் உணர்வுகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.
சிலர் மற்றவர்களோடு பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மொபைலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். `மொபைல் பாக்குறத நிறுத்தினாலே, இவன் டாப்பா வந்துடுவான்’ என வருத்தம் கொள்ளாத அம்மாக்களே இல்லை.
பிள்ளைகள் மட்டும் மொபைல் பயன்படுத்தினால் பரவாயில்லை, குடும்பமே பயன்படுத்தினால் சிரமம் தான்.
மஞ்சு குப்தா என்ற பெண் தன் குடும்பத்தினர் மொபைல் போனுக்கு அடிமையாகி இருப்பதைத் தடுக்க புதுவித யுக்தியைக் கையாண்டுள்ளார்.
இதற்காக ஒரு முத்திரைத் தாளை வாங்கி முத்தான மூன்று விதிகளை உருவாக்கி உள்ளார். இந்தியில் எழுதப்பட்டுள்ள விதிகளில், முதல் விதி, குடும்பத்தினர் காலையில் எழுந்தவுடன் ஸ்மார்ட் போனை பார்க்காமல், சூரியனைப் பார்க்க வேண்டும். டிஜிட்டல் உலகில் அவர்களது வாழ்க்கை தொடங்காமல் நிஜ உலகத்தில் இருந்து தொடங்க வேண்டும்.
இரண்டாவது விதி, சாப்பிடும்போது அனைவரும் தங்களது மொபைலை தூரமாக வைத்திருக்க வேண்டும். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும்.
மூன்றாவது விதி, பாத்ரூமில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தப்படுத்தக் கூடாது. அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ரீல்ஸ் பார்த்து நேரத்தை வீணடிக்கக் கூடாது.
மூன்று விதிகளின் ஒப்பந்தத்துடன் குடும்பத்தினர் இணங்கி செயல்பட வேண்டும் என குப்தா நினைக்கிறார். குடும்பத்தினரிடம் அந்த அஃக்ரிமென்ட்டில் கையெழுத்தும் வாங்கி உள்ளார்.
இவரின் இந்த அக்ரிமென்ட் யோசனை சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றதையடுத்து, பலரும் இவரது முயற்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். `குடும்பத்தினர் விதிகளைப் பின்பற்றாவிட்டால், தண்டனையாக ஸ்மார்ட்போனுக்கு பதிலாக 1,100 ரூபாய் மதிப்புள்ள நோக்கியா போனை கொடுங்கள்’ என கமென்ட் செய்து வருகின்றனர்.
மொபைல் போனுக்கு அடிமையாவதைத் தடுக்க நீங்கள் என்ன யுக்திகளைக் கையாள்கிறீர்கள்… கமென்டில் சொல்லுங்கள்!