இது ‘நிக்லேரியா ஃபவுலேரி’ ( Naegleria fowleri) எனப்படும் அமீபா வகையைச் சேர்ந்தது. மருத்துவர்கள் இதை ‘பிரைமரி அமீபிக் என்செஃபலைட்டிஸ்’ (Primary Amoebic Encephalitis) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். அதனால், இதை ‘மூளை தின்னும் அமீபா’ என்கிறார்கள். இதை ஆஸ்திரேலியாவில் 1965-ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறிந்தார்கள்.

வாழும் இடத்தைப் பொறுத்து, 8 மைக்ரோமீட்டர் முதல் 15 மைக்ரோமீட்டர் வரையான அளவில் இந்த அமீபா காணப்படுகிறது. பொதுவாக இவை வெதுவெதுப்பான நன்னீரில் அல்லது அழுக்கான ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில், குறிப்பாக குறைந்த அளவு நீர் மட்டம் கொண்ட நீர்நிலைகளில் வாழ்கின்றன.
அதுமட்டுமல்லாமல், முறையாக குளோரின் கலந்து கிருமி நீக்கம் செய்யப்படாத நீச்சல் குளங்கள், குழாய்த் தண்ணீர், கிணற்று நீர், வாட்டர் தீம் பார்க் நீர்விளையாட்டு பகுதிகள், ஸ்பா போன்ற இடங்களிலும் வாழக்கூடும்.
சுத்தமற்ற வெதுவெதுப்பான நீர்நிலைகள்தான் ‘மூளைத் தின்னும் அமீபா’ வாழ்வதற்கு ஏற்ற இடம். 115 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்கூட இந்த அமீபா உயிர்வாழ முடியும். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குழாய்த் தண்ணீர், நீச்சல் குள நீர் மற்றும் உப்புக் கடல் நீரில் இந்த அமீபா வாழ முடியாது என்று ApolloHospital.com தெரிவிக்கிறது.