மும்மொழிக் கொள்கை: தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழக தலைவர்கள எதிர்ப்பு – மாநில பாஜக கூறுவது என்ன?
‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி தொடர்பான கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில் தமிழ்நாட்டு தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிச் சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக் குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் ப்ரீ.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாகும். அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைப்பதும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.2,152 கோடி. இந்தத் தொகையை மத்திய அரசு முறையாக ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும், தேசிய கல்விக்கொள்கையை ஏற்கும்படி மத்திய அரசு வலியுறுத்துவதாகவும் தமிழ்நாடு அரசு முன்பே குற்றம் சாட்டியது. இது தொடர்பான சர்ச்சை பல மாதங்களாகவே உள்ளது.
இந்த நிலையில், வாரணாசியில் நடந்த காசி தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் முதலில் இந்திய அரசின் நிபந்தனைகளை ஏற்பதாக தமிழ்நாடு அரசு கூறியதாகவும், பின்னர் அதில் இருந்து பின்வாங்கியதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார். மேலும், தமிழ்நாடு அரசு அரசியலுக்காகவே இதைச் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
ரூ.2000 கோடி வரை நிலுவைத் தொகை உள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது எனக்கு அது தெரியும், ஆனால், அரசமைப்பின் விதிமுறைகளை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் எனக் கூறிய தர்மேந்திர பிரதானிடம், ஏற்கும் வரை நீங்கள் நிதியை விடுவிக்க மாட்டீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்திய அரசின் நிபந்தனைகளை தமிழ்நாடு ஏற்பதாகக் கூறியது. பின்னர் அதில் இருந்து பின்வாங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு இதை அரசியலுக்காகவே செய்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழக தலைவர்கள் எதிர்ப்பு
தர்மேந்திர பிரதானின் இந்தப் பதில்தான் தமிழ்நாட்டு தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக் குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்” முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இது 40 லட்சம் மாணவர்கள் சம்மந்தப்பட்ட விஷயம், இதில் அரசியல் செய்யக்க் கூடாது என்றார்.
முதலமைச்சரிடம் ஆலோசித்து இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் கூறினார்.
ஹிந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் பேச்சைக் கண்டித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “அனைத்து மாநிலங்களையும் சமமாகக் கருத வேண்டிய ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது மிகப்பெரிய அநீதி. இது அரசமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சாவால். இதை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதியளிக்கமாட்டோம் எனக் கூறுவது கொடுங்கோண்மை, ஆணவம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டித்துள்ளார்.
“மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?” என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
பட மூலாதாரம், @annamalai_k
தமிழக பாஜக கூறுவது என்ன?
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவதாக ஒரு இந்திய மொழி என மும்மொழிகளைக் கற்பிக்கக் கூடாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?” என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.