தாராவியில் மோதும் தமிழ், மலையாள வேட்பாளர்கள்
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் உள்ள 185 மற்றும் 188வது வார்டில் இம்முறை கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு வார்டுகளில்தான் தமிழர்கள் கணிசமாக இருக்கின்றனர். 185வது வார்டில் தாராவி தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் சயான் பகுதியைச் சேர்ந்த ரவிராஜா என்பவருக்கு பா.ஜ.க வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.
ரவிராஜா 30 ஆண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். அதோடு கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். தாராவியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது உள்ளூர் பா.ஜ.க தலைவர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. ஆனால் அனைவரும் தனக்காகப் பாடுபட்டு வருவதாக ரவிராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரிடம் பேசியபோது, ”நான் 25 ஆண்டுகள் மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்திருக்கிறேன். எனவே சயான் பகுதி மக்கள் மட்டுமல்லாது தாராவி மக்களுக்கும் என்னை நன்றாகத் தெரிந்திருக்கிறது. கட்சி நிர்வாகிகள் அனைவரும் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லாமல் எனக்காகப் பாடுபட்டு வருகின்றனர்.

தாராவி மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கச் செய்வதுதான் எனது முதல் குறிக்கோள் என்று தெரிவித்தார்.
ரவிராஜாவிற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேரடியாக வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்று இருக்கிறார். இது தவிர தமிழகத்தில் இருந்து அண்ணாமலையும் வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்று இருக்கிறார்.
ரவிராஜாவை எதிர்த்து மலையாளியான ஜெகதீஷ் என்பவர் சிவசேனா(உத்தவ்) சார்பாகப் போட்டியிடுகிறார். உள்ளூரில் மிகவும் பிரபலமான முன்னாள் கவுன்சிலரான ஜெகதீஷ் ரவிராஜாவிற்குக் கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார்.
இதே போன்று தாராவியில் உள்ள மற்றொரு வார்டான 188வது வார்டில் முன்னாள் சிவசேனா கவுன்சிலரான மாரியம்மாள் முத்துராமலிங்கம் திடீரென காங்கிரஸ் கட்சிக்குத் தாவி அந்தக் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார். ஆனால் அந்த வார்டில் தமிழர்கள் மட்டுமல்லாது கணிசமான அளவு முஸ்லிம்களும் இருக்கின்றனர்.
தமிழர்களின் வாக்குகளைப் பிரிக்க காங்கிரஸில் சீட் கிடைக்காமல் சாலமோன் ராஜா என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இதுதவிர மாறன் என்பவரும் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
இவர்கள் இருவரும் தமிழர்கள் வாக்குகளை வெகுவாகப் பிரிக்கக்கூடும் என்பதால் மாரியம்மாள் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளார். இதுதவிர 162வது வார்டில் அண்ணாமலை என்பவர் உத்தவ் தாக்கரே கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார்.
அண்ணாமலையும் இதற்கு முன்பு கவுன்சிலராக இருந்துள்ளார். மூன்று பேருமே கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளனர். அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி தனித்தனியாக போட்டியிடுகின்றன. 188வது ஆம் ஆத்மி கட்சி சார்பாக வழக்கறிஞர் மஞ்சுளா என்ற தமிழ்ப் பெண் வழக்கறிஞரும் போட்டியிடுகிறார்.