மும்பை பாந்த்ரா பகுதியில் கிரிக்கெட் உள்விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க மாநில அரசு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு நிலம் ஒதுக்கி இருந்தது. அந்த நிலத்தைக் குடிசைவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
1988ம் ஆண்டு 2000 சதுர மீட்டர் நிலத்தை மாநில அரசு சுனில் கவாஸ்கருக்கு ஒதுக்கி இருந்தது. ஆனால் அந்த நிலம் இப்போது மிகவும் மோசமாக இருக்கிறது. இதையடுத்து அந்த நிலத்தை மகாராஷ்டிரா வீட்டுவசதி வாரியமான மஹாடா திரும்ப எடுத்துக்கொண்டுள்ளது. 60 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் அதனை மாநில அரசு பாதியிலேயே எடுத்துக்கொண்டது. அந்த நிலத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருடன் இணைந்து கிரிக்கெட் உள்விளையாட்டு பயிற்சி அகாடமி ஆரம்பிப்பது தொடர்பாக சுனில் கவாஸ்கர் 2019ம் ஆண்டு அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்தித்துப் பேசினார்.

அதோடு அப்போது அமைச்சராக இருந்த ஆதித்ய தாக்கரேயையும் சந்தித்துப் பேசினார். நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஆண்டுக்குள் பணியைத் தொடங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சுனில் கவாஸ்கருக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் எந்த வேலையும் நடக்கவில்லை. இதையடுத்து அந்த நிலத்தில் கிரிக்கெட் அகாடமி தொடங்க விரும்புவதாக கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே விருப்பம் தெரிவித்தார். இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் அசோசியேசன் பொருளாளர் ஆசிஷ் ஷெலாரை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆசிஷ் ஷெலார் இது குறித்து வீட்டு வசதி வாரியமான மஹாடா மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்குக் கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் சுனில் கவாஸ்கருக்குக் கொடுத்த நிலத்தை மஹாடா நிர்வாகம் திரும்ப எடுத்துக் கொண்டுள்ளது. தற்போது அந்த நிலம் ரஹானேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மஹாடா எடுத்த தீர்மான நகல் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சரவை அதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறது.

இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ரஹானே நன்றி தெரிவித்துள்ளார். அந்த இடத்தில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் அகாடமி தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரஹானே 85 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும், 90 ஒருநாள் போட்டியிலும் விளையாடி இருக்கிறார். அதோடு இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.