மருத்துவ பரிசோதனையில் இதைக் கண்டறிந்து, இரண்டு மணி நேர அறுவைசிகிச்சைக்குப் பின், சிறுமியின் வயிறு மற்றும் குடலில் இருந்த முடிகளை மருத்துவர்கள் அகற்றினர். பின் அதை அளந்து பார்த்தபோது, சுமார் மூன்று கிலோ முடியைச் சிறுமி உண்டிருப்பது தெரிய வந்தது.
சிறுமிக்கு மருத்துவம் பார்த்த ஷி ஹாய் என்ற இரைப்பை, குடல் மருத்துவர் கூறுகையில், “சிறுமி சரியாகச் சாப்பிடுவதில்லை என மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்ததில், அவரது வயிற்றில் முடி நிரம்பி இருந்தது தெரிந்தது. அதனால் உணவு செல்வதற்கு வேறெந்த இடமும் இல்லை. முடி அனைத்தையும் அடைந்திருந்தது.
சிறுமி தன்னுடைய தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறாள். அவர்கள் இவளின் விநோத நடத்தையைக் கவனிக்கவில்லை. பல வருடங்களாகச் சிறுமி உளவியல் பிரச்னைகளை எதிர்கொண்டு, முடியை உண்டு வருகிறாள். இவளின் பெற்றோர்கள் பணி நிமித்தமாகத் தொலைவில் வசித்து வருகின்றனர். இதுதான் பொதுவான காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களுடைய முடியை தாங்களே உண்பது Rapunzel syndrome என்று அழைக்கப்படுகிறது. 2017-ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது மாணவி அதிகப்படியான முடியை உண்டு, வயிற்றில் தொற்று ஏற்பட்டதால் இறந்துபோனது உள்ளிட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
`பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத் தான் உழைக்கிறீர்கள் என்றாலும், குழந்தைகளின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது’ என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.