மழையின் திருவிளையாடல்: ஆப்கனுக்கு அரையிறுதி வாய்ப்பு மிக மிக கடினம்… ஏன்? | Rain interrupts match against Australia: Afghan looses edge in reaching semi finals

Share

பெண்கள் கிரிக்கெட்டை ஆப்கன் தடை செய்து வைத்திருப்பதால் ஆப்கன் ஆண்கள் அணியுடன் இருதரப்பு தொடர் ஆடவே மாட்டோம் என்று ஆஸ்திரேலியா சபதம் செய்துள்ளதை அடுத்து கிரிக்கெட் உலகின் புதிய வைரிகள் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் என்று கூறப்பட்டு வருகிறது.

அதற்கேற்ப 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா தோல்வியின் விளிம்பிற்குச் சென்று கிளென் மேக்ஸ்வெல்லின் அதியற்புத காட்டடியினால் வெற்றி பெற்றது, அதற்கு அவர் கேட்ச் விட்ட முஜிபுர் ரஹ்மானுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று ஆப்கன் அணி 273 ரன்களைக் குவித்தது. இது ஒரு சவாலான இலக்குதான். ஆனால் ஆப்கன் அணியின் தொடக்கப் பந்துவீச்சு படுமோசத்துக்கும் கீழ் சென்றதோடு டிராவிஸ் ஹெட்டுக்கு ரஷீத் கான் கையில் வந்த கேட்சை விட்டதால் வந்த வினை, டிராவிஸ் ஹெட் அவர்கள் பந்து வீச்சைத் தண்டித்துக் கொண்டிருந்தார்.

12.5 ஓவர்களில் 109/1 என்று இருந்த போது கனமழை பெய்யத் தொடங்கியது. பிறகு மழை நின்றாலும் மைதானம் விளையாட ஏற்புடையதாக இல்லாததால் ஆட்டம் நோ-ரிசல்ட் ஆனது. இதனையடுத்து 3 போட்டிகளில் 1 வெற்றியுடன் ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இதனையடுத்து, 2-ம் இடத்தில் 2.14 ரன் ரேட்டுடன் தென் ஆப்பிரிக்கா உள்ளது, ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகளுடன் இருந்தாலும் நிகர ரன் விகிதத்தில் -990-வில் உள்ளது. இன்று இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பெரிய அளவில் தோல்வி கண்டால்தான் ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல வாய்ப்புள்ளது. மழை வந்து ஆட்டம் நடைபெறாமல் போனால், அல்லது நோ-ரிசல்ட் ஆகிவிட்டால் தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறும்.

ஆட்டம் முழுதும் நடைபெற்றால் 300 ரன்கள் இலக்குக் கொண்ட போட்டியாக இருந்தால் தென் ஆப்பிரிக்கா 2வது பேட்டிங் செய்தால் இங்கிலாந்து 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து 2வது பேட் செய்தால் இதுபோன்ற இலக்கை 11.1 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றி பெற வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடந்தால்தான் தென் ஆப்பிரிக்காவின் ரன் ரேட் ஆப்கனை விட கீழிறங்கி ஆப்கான் அரையிறுதிக்குச் செல்ல முடியும்.

இது சாத்தியமா? ஆகவே, ஆப்கான் அரையிறுதிக் கனவு தகர்ந்து போனது என்றே கொள்ள வேண்டும். நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா கை ஓங்கியிருந்தாலும், சொல்ல முடியாது… ஏனெனில் ஆஸ்திரேலியா கொத்தாக விக்கெட்டுகளை விடும் சரித்திரம் கொண்டது. ஆனால் அந்தோ! மழை வந்து ஆப்கானின் விதியைத் தீர்மானித்து விட்டது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com