புதுச்சேரியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கொசுக்களின் பெருக்கம் அதிகரித்திருக்கிறது. அவற்றை கட்டுப்படுத்த புதுச்சேரி நகராட்சி சார்பில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், கால்வாய்களில் கொசு மருந்து மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல நகராட்சி ஊழியர்கள் இறங்கி கொசு மருந்து அடிக்க முடியாத பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், டி.வி.நகர், ஜெயமூர்த்தி ராஜா நகர், வேல்ராம்பட்டு கழிவு நீர் வாய்க்கால் போன்ற பகுதிகளில் ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் கொசு ஒழிப்பு குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `கடந்த 2024 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2025 ஜனவரி வரை, சுகாதாரத்துறை ஊழியர் குழு புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆய்வுக்குச் சென்றது. ஒரு வீட்டிற்கு மூன்று பேர் என புதுச்சேரியில் 45,000 வீடுகளுக்கும், காரைக்காலில் 15,000 வீடுகளுக்கும் கள ஆய்வுக்குச் சென்ற அந்தக் குழு, வீடுகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் பிளாஸ்டிக் டப்பாக்கள், ஆட்டு உரல், இளநீர் குடுவைகள் மற்றும் தேவையற்றுக் கிடந்த டயர் உள்ளிட்டப் பொருட்களை அகற்றியிருக்கின்றன. 2021 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரியில் மலேரியா காய்ச்சல் நோயாளிகள் இல்லை டெங்கு காய்ச்சல் 20% சதவிகிதம் குறைவாக உள்ளது.