பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மும்பையிலும் நேற்று முன் தினம் பெய்த திடீர் மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொங்கன் பகுதியில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் சாவந்த்வாடி, மால்வான் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்து இருக்கிறது.
பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஏராளமான மரங்கள் ஒடிந்து விழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெய்த கனமழையால் இடி தாக்கியும், மரங்கள் விழுந்தும், தண்ணீரில் மூழ்கியும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
திங்கள் கிழமை இடிதாக்கி 5 பேரும், தண்ணீரில் மூழ்கி 5 பேரும் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட விலங்குகளும் இந்த மழையால் உயிரிழந்துள்ளன.