ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது.
மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷனை வீழ்த்தினார். அது அந்த அணியின் அதிரடி தொடக்க பாணியை கட்டுக்குள் வைத்தது. இருப்பினும் டிராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.
அவர் ஆட்டமிழந்ததும் கிளாஸன் களத்துக்கு வந்தார். நிதிஷ் உடன் சேர்ந்து சின்ன பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த போது ரன் அவுட் ஆனார்.
நிதிஷ் ரெட்டி அடித்த பந்தை தடுக்க முயன்றார் லக்னோ பவுலர் பிரின்ஸ் யாதவ். பந்து அவர் கையில் பட்டு ஸ்டம்ப்பை தகர்த்தது. கிரீஸுக்கு வெளியில் இருந்து கிளாஸன் அவுட் ஆனார். தொடர்ந்து 32 ரன்களில் நிதிஷ் ஆட்டமிழந்தார்.
அனிகேத் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து அபினவ் மனோகர், கம்மின்ஸ், ஷமி ஆகியோர் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.
191 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய லக்னோ அணியின் ஓப்பனிங் வீரர்களான மிச்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் பேட் செய்தனர். இதில் மிச்செல் மார்ஷ் அரை சதம் கடந்து அசத்தினார். எய்டன் மார்க்ரம் ஒரே ரன்னில் பேட் கம்மின்ஸுக்கு கேட்ச் கொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து இறங்கிய நிக்கோலஸ் பூரன் 26 ரன்களில் 70 ரன்களை குவித்து அதிரடி காட்டினார். 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் குவித்தார்.
அடுத்தடுத்து ரிஷப் பந்த், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத் ஆகியோர் பெரிதாக சோபிக்கவில்லை. இப்படியாக 16 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை கடந்து வெற்றிபெற்றது லக்னோ அணி.
இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் நிக்கோலஸ் பூரன். இதுவரை ஐபிஎல் தொடரில் நான்கு முறை 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து இருக்கிறார்.