சிட்னி: இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் பும்ராவை தான் சீண்டியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.
சிட்னி போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிய சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருக்க இந்த சம்பவம் நடந்தது. பும்ரா மற்றும் சிராஜ் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜாவும், சாம் கான்ஸ்டாஸும் தடுமாறினர்.
அப்போது பும்ரா பந்து வீச ஆயத்தமானார். அந்த சூழலில் கவாஜா பந்தை எதிர்கொள்ள தயாராக சற்று நேரம் எடுத்துக் கொண்டார். நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த கான்ஸ்டாஸ் இந்திய அணியின் கேப்டன் பும்ராவிடம் வம்பிழுத்தார். தொடர்ந்து இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். நடுவர் தலையிட்டு இருவரையும் விலக்கி விட்டார். தொடர்ந்து பந்து வீசி கவாஜா விக்கெட்டை கைப்பற்றி பும்ரா அசத்தினார்.
“அந்த சம்பவத்துக்கு பிறகு கவாஜா ஆட்டமிழந்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அதை கண்டு நான் வியப்படையவில்லை. தவறு என்னுடையது தான். பும்ராவை நான் சீண்டினேன். அவர் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இதுதான் கிரிக்கெட்.
அந்த நாளின் கடைசி சில ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில் பந்தை எதிர்கொள்ள உஸ்மான் கவாஜாவுக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்ட காரணத்தால் நான் அப்படி செய்தேன். இயல்பாகவே நான் மிகவும் சாதுவானவன். களத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து எனது பெற்றோர் மற்றும் சக அணி வீரர்களுடன் பேசி இருந்தேன். நான் பேட் செய்யும் போது அட்ரினலின் ஹார்மோன் கொஞ்சம் அதிகம் பம்ப் ஆவதாக கவாஜா சொல்லி இருந்தார்.
எனது அறிமுக போட்டியை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். இலங்கை தொடருக்கான அணியில் நான் இடம்பெறுவேனா என எனக்கு தெரியவில்லை. ஆனால், அது நடந்தால் புதிய சூழலுக்கு ஏற்ற வகையில் கிரிக்கெட் விளையாடும் புதிய சாம் கான்ஸ்டாஸை நீங்கள் பார்க்கலாம். அதற்கான பதில் வரும் நாட்களில் தெரியும்” என அவர் தெரிவித்தார்.