உலகையே ஒரே பந்தில் சுழல வைக்கும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையின் விறுவிறுப்பு, 2026 ஆம் ஆண்டு புதிய சாதனைகளுடன் அரங்கேறி வருகிறது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பைத் தொடர், ஆரம்பம் முதலே பல புதிய வரலாற்றுப் பக்கங்களை எழுதி வருகிறது.
வரலாற்றிலேயே முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடரில், மொத்தம் 104 போட்டிகள் விளையாடப்படுகின்றன. இந்த விரிவாக்கப்பட்ட புதிய ஆட்ட முறையானது கால்பந்து உலகின் பழைய சாதனைகள் பலவற்றைத் மாற்றி, யாரும் எதிர்பாராத புதிய மைல்கற்களை பதித்துள்ளது. தற்போது குழு சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் தொடரில் புதிய உலக சாதனை படைத்துள்ள சில முக்கிய வரலாற்றுத் தருணங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்யாத அசாத்திய சாதனையை இந்த 2026 உலகக்கோப்பையில் மூன்று வீரர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெக்சிகோ அணியின் சீனியர் கோல்கீப்பர் கில்லெர்மோ ஒச்சோவா ஆகிய மூவரும் தங்களின் 6-வது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

1930-ல் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, ஆறு வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களுக்கான அணியில் இடம்பிடித்த வீரர்கள் என்ற சிறப்பு, இவர்களையே சேரும்.
கால்பந்து உலகின் “மன்னன்’ என்று அழைக்கப்படும் லியோனல் மெஸ்ஸி, இந்த 2026 உலகக்கோப்பையில் கால் பதித்த தருணம் முதலே சாதனைகளைத் தன்வசமாக்கி வருகிறார்.

ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை (16 கோல்கள்) முறிடித்து, உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (19 கோல்கள்) அடித்த வீரர் என்ற அசாத்திய சாதனையை மெஸ்ஸி தனதாக்கிக் கொண்டார்.
ஜோர்டான் அணிக்கு எதிரான போட்டியில் மாற்று ஆட்டக்காரராகக் களம் புகுந்து அவர் அடித்த அற்புதம் வாய்ந்த ஃப்ரீ-கிக் கோல் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோலடித்த உலகின் முதல் வீரர் என்ற புதிய சரித்திர சாதனையைப் படைத்துள்ளார்.