உள்ளே வந்த சான்ட்ரா, தன் கணவர் பிரஜினை தவிர்ப்பது போல் பாவனை செய்து விட்டு பிறகு ரோஜாவை நீட்டி “20 நாள் பார்க்காம இருந்தது, 20 யுகம் மாதிரி இருந்தது” என்று முழங்காலில் நின்று ரொமான்ஸ் செய்தார். இடைப்பட்ட நாட்களில் எப்படியும் இவர்கள் வீட்டில் சந்தித்திருப்பார்கள். என்றாலும் பொதுவெளியில் இப்படியொரு டிராமாவா என்று எண்ணத் தோன்றியது.
உன்னை பாம்புன்னு சொல்லல’ – மறுத்த சான்ட்ரா “சொன்னே.. ஆதாரம் இருக்கு’ – அடம்பிடித்த ரம்யா
“என்னை தூக்கிக்கோ” என்று சான்ட்ரா சொல்ல, ‘கையில் முளைத்த கனவா நீ” என்று பாடல் பாடி, காமிரா கோணம் வைத்து இம்சை செய்தார் பிரவீன் காந்தி. (இவருக்கு ஏன் படம் வரலைன்னு இப்பத்தான் புரியுது!). சான்ட்ராவின் கையில் இருந்த ரோஜாவை கடன் வாங்கி சென்றார் திவாகர். (யாரிடம் தந்து ஏழரையைக் கூட்டினாரோ?!)
நேராக ரம்யாவிடம் சென்ற சான்ட்ரா “நான் உன்னை பாம்புன்னு சொல்லவேயில்ல. என் கிட்ட முழு வீடியோவும் இருக்கு. நான் உன்னை தப்பா பேசல” என்று பஞ்சாயத்தை ஆரம்பிக்க “என் கிட்ட வீடியோ இருக்கு. நீ சொன்னே” என்று ரம்யா மல்லுக்கட்டினார்.
(பேசிட்டே இருந்தா எப்படி, ரெண்டு வீடியோவையும் போட்டுக் காட்டுங்க!). “என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன்” என்று வழக்கம் போல் மிகையாக ரியாக்ட் செய்தார் சான்ட்ரா. தன் குழந்தைகளைப் பற்றி யாராவது பேசினால் கோபம் கொள்கிற சான்ட்ராவிற்கு, அற்ப விஷயத்திற்கு கூட அவர்கள் மேல் சத்தியம் செய்வது எரிச்சலான முரண்.
சான்ட்ராவின் அடுத்த பஞ்சாயத்து அமித்துடன். “நான் அவங்க கூட பேசவே மாட்டேன். ஒரு வாரம் ஃபுல்லா அழுதுட்டு உக்காந்தவங்களுக்கு ஆறுதல் சொல்லப் போனா, பழியை என்மேலயே போடறாங்க. நான்தான் போய் வம்படியா அவங்க விட்ட பேசினேனாம்” என்று வருத்தத்தில் இருக்கிறார் அமித்.