பட மூலாதாரம், Getty Images
”நான் இன்று மட்டும் 5 பாம்புகளைப் பிடித்துள்ளேன். நான் பிடித்ததில் கண்ணாடி விரியன், நாகப்பாம்பு ஆகியவை நஞ்சுள்ளவை. பூனைப்பாம்பு, ஆபத்தில்லாத மிதமான நஞ்சைக் கொண்டவை. மற்ற இரண்டும் நஞ்சில்லாத பாம்புகள். என்னைப் போலவே, கோவையில் இருக்கும் பாம்பு மீட்பர்கள் சிலர் 4 அல்லது 5 பாம்புகளை மீட்டுள்ளனர். இது வழக்கத்தைவிட சற்று அதிகம்தான்.”
கோவையில் 27 ஆண்டுகளாகப் பாம்புகளை மீட்கும் பணியை மேற்கொண்டு வரும் அமீன் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல் இது.
பொதுவாக கோடைக் காலங்களில் வீடுகளை நோக்கி பாம்புகள் அதிகளவில் படையெடுக்கும் என்ற கருத்துக்கு பாம்பு மீட்பர்கள் சொல்லும் தகவல்கள் மேலும் வலு சேர்க்கின்றன. ஆனால் கோடைக் காலங்களில் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி அதிகமாக வருவதாக எந்தப் புள்ளி விவரமும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பாம்புகள் வந்தால் வனத்துறை அல்லது தீயணைப்புத் துறைக்குத் தகவல் தர வேண்டும் என்பதையும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள 362 வகையான பாம்புகளில், தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, சமவெளிகள் என எல்லாப் பகுதிகளிலும் சேர்த்து 134 வகையான பாம்புகள் இருப்பதாகச் சொல்கிறார் ஊர்வனம் இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்புக் குழுவின் நிறுவனர் இரா.விஸ்வநாத்.
”தமிழகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 134 பாம்புகளில் 17 மட்டுமே அதிக நஞ்சுள்ள பாம்புகள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத, அதேநேரத்தில் நஞ்சுள்ள பாம்புகள் என 11 வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆபத்தில்லாத அதே நேரத்தில் நஞ்சுள்ளவையாக 20 பாம்புகள் உள்ளன. இவை தவிர்த்து 86 விதமான பாம்புகள் நஞ்சில்லாதவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன” என்கிறார் விஸ்வநாத்.
பாம்பு – ஒரு குளிர் ரத்தப் பிராணி
தென்னிந்தியாவில் பாம்புக் கடியால் அதிகம் பாதிக்கப்படுவதில் தமிழகம்தான் முதன்மை மாநிலமாக இருப்பதாகச் சொல்கிறார் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் உலகளாவிய பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனர் மற்றும் முதன்மை விஞ்ஞானியுமான மனோஜ்.
பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ICMR) இணைந்து ஆராய்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறார்.
”இந்தியாவில் பாம்புக்கடிக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதில் 58 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பாம்புக் கடிக்கு உள்ளாகும் 100 பேரில் 95 பேர், நஞ்சில்லாத பாம்புகளாலும், 5 சதவீதம் பேர் மட்டுமே ‘பிக் 4’ எனப்படும் பெரிய வகை நஞ்சுள்ள பாம்புகளாலும் தாக்கப்படுகின்றனர்” என்கிறார் மனோஜ்.
பொதுவாக நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு வரியன் ஆகிய விஷப்பாம்புகள், குடியிருப்புகளை ஒட்டி வாழக் கூடியவை என்று சொல்லும் பாம்பு மீட்பர் விஸ்வநாத், சுருட்டை விரியன் எனும் அதிக நஞ்சுள்ள மற்றொரு வகைப் பாம்பு, அதிக வெப்பமுள்ள பாறைகள் நிறைந்த பகுதிகளில்தான் வாழும் என்கிறார். அவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பலரும் சுருட்டை விரியன் கடித்து உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கோடைக் காலங்களில் குடியிருப்புகளை நோக்கி அதிகளவில் பாம்புகள் வருவதாகச் சொல்லும் விஸ்வநாத், அதற்கான காரணங்களையும் விளக்குகிறார். இதே காரணத்தையே மற்ற பாம்பு ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். உணவுப் பற்றாக்குறை ஒரு முக்கியக் காரணமாக இருக்குமென்றும் இவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
”பாம்பு ஒரு குளிர் ரத்தப் பிராணி. அது தன்னுடைய உடல் வெப்பத்தை அதன் வாழுமிடத்திலுள்ள சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ள முயற்சி செய்யும். அதாவது கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, சற்று குளிர்ச்சியுள்ள இடத்தை நோக்கியும், அதிகம் குளிராகவுள்ளபோது, கதகதப்பான இடங்களைத் தேடியும் செல்லும்” என்கிறார் பாம்புகளை மீட்பதில் வல்லுநரான விஸ்வநாத்.
தொடர்ந்து பேசிய அவர், ”நாகப் பாம்பு, கட்டு வரியன், கண்ணாடி விரியன் ஆகியவைதான், வீடுகளுக்குப் படையெடுக்கும் நஞ்சுள்ள பாம்புகள். சமவெளிகளில் காணப்படும் நஞ்சற்ற 24 வகைப் பாம்புகளும் குடியிருப்புகளை நோக்கி நகர்வது இயற்கையாக நடப்பதுதான். கோடைக் காலம் முட்டையிலிருந்து பாம்புகள் வெளிவரும் காலம் என்பதால், இந்தக் காலகட்டத்தில் அதிகளவில் குட்டிப் பாம்புகளை மீட்டு வருகிறோம்” என்கிறார்.
எந்த வகை பாம்புகள் எங்கெங்கே வாழ்கின்றன?
சமவெளிகளில் வாழும் சாரைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், தண்ணீர்ப் பாம்புகளான கண்டங்கண்டை நீர்க்கோழி, காளியாங்குட்டி போன்றவை, எண்ணெய்ப் பனையன், ஓலைப்பாம்பு, புழுப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு, சிவப்பு மண்ணுளிப் பாம்பு, மோதிர வளையன், ஓடுகாலிப் பாம்பு, பச்சைப் பாம்பு போன்ற நஞ்சற்ற பாம்புகளே இந்த கோடை சீசனில் அதிகளவில் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார் அவர்.
”அதேபோல, மலைகள் மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் ராஜநாகம், குழி விரியன், மூங்கில் குழி விரியன், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மலபார் குழி விரியன் போன்ற பாம்புகள், கோடைக் காலங்களில், ஈரம் அதிகமுள்ள ஓடைகளில் அதிகமாகக் காணப்படும். தோட்டங்கள் குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் கூனல் மூக்குக் குழி விரியன் (Hump-nosed Pit Viper) என்ற பாம்பு அதிகமாக வரும். இந்த வகைப் பாம்பு, இரவு நேரங்களில்தான் மிகத் துடிப்போடு இருக்கும்” என்கிறார் விஸ்வநாத்.
கோடைக் காலத்தில் குளிர்ச்சியைத் தேடி குடியிருப்புகளுக்கு பாம்புகள் படையெடுக்கும் என்பதை ஒப்புக் கொள்ளும் காட்டுயிர் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாகி சிராஜ்தீன், இந்தக் காலகட்டத்தில் காடுகளில் உணவு குறைந்துவிடுவதாலும் எலி போன்ற உணவைத் தேடியும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கு பாம்புகள் அதிகமாக வருவதாகத் தெரிவித்தார்.
”கோடைக் காலத்தில் குளிர்ச்சியுள்ள இடத்தையும், பருவமழை மற்றும் கடுங்குளிர் காலங்களில் கதகதப்பான இடங்களையும் தேடி பாம்புகள் வருவது வழக்கம்தான். மனிதர்களின் வாழ்விடங்களுக்கு பாம்புகள் வருகின்றன என்று இதைக் கூறுவதைவிட, பாம்புகளின் வாழ்விடங்கள் சுருங்கி வருவதால் அவை உணவு தேடி வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார் சிராஜ்தீன்.
”பாம்புகளின் முக்கிய உணவாக தவளையும் எலியும் இருக்கின்றன. தவளைகள் அதிகமுள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. அதனால் எலிகள்தான் பாம்புகளுக்குப் பிரதான உணவாக மாறிவிட்டன. உணவுக் குப்பைகள் அதிகமாகப் போடப்படும் இடங்களில் எலிகள் நிறைய வருகின்றன. குடியிருப்புகளுக்குள் பாம்புகள் வருவதற்கு இதுவும் முக்கியக் காரணம்” என்றும் அவர் விளக்கினார்.
வீடுகளுக்குள் பாம்புகள் வருவதைத் தடுக்க என்ன வேண்டும்?
குடியிருப்புகளுக்குள் பாம்புகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கு, பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய பல வழிமுறைகளையும் பாம்பு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கோடைக் காலத்தில் மட்டுமின்றி, இந்த வழிமுறைகளை எல்லாக் காலங்களிலும் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் இவர்கள், வீடுகளில் தவிர்க்க வேண்டிய சில செயல்பாடுகளையும் குறிப்பிடுகின்றனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய பாம்பு மீட்பதில் வல்லுநரான விஸ்வநாத், ”காற்று வேண்டும் என்பதற்காக கோடைக் காலங்களில் பலரும் தரையில் படுப்பார்கள். அப்போது சுற்றிலும் கொசுவலை போன்ற பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். சில பாம்புகள் கதவுகள் வழியாக வரும். சமையலறை பாத்திரம் கழுவும் தொட்டிகளில் உள்ள குழாய்கள் வழியாகவும் வரக்கூடும். அப்படி சில பாம்புகளைப் பிடித்துள்ளோம். அதற்கு மூடி போடுவது அவசியம்” என்கிறார்.
”வீட்டுக்கு வெளியில் ஷூக்களை வைக்காமல், ஏதாவது ஆணி போன்ற அமைப்புகளில் தொங்கவிடுவது நல்லது. இல்லாவிட்டால் அதற்குள் சிறு பாம்புகள் சென்று ஒளிந்து கொள்ளும். உதறினாலும் வெளியில் வராது. குளிர் காலங்களில் கார்களுக்குள் சென்றுவிடும். தார் சாலைகள் பகலில் வெப்பத்தை உறிஞ்சி, இரவில் வெளியில் விடும் என்பதால் சாலையின் மீதே பாம்புகள் படுத்திருக்கும். அதனால் இரவு நேரங்களில் இருளில் டார்ச் லைட் இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் ஆலோசனை தருகிறார் விஸ்வநாத்.
கோடையில் சற்று வெப்பம் குறைவாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும் கட்டட இடுக்குகள், செங்கற்கள் அடுக்கிய இடங்களில் பாம்புகள் தங்கிவிடும் என்பதால் அத்தகைய இடங்களில் கவனமாகச் செல்ல வேண்டும் என்கிறார் சிராஜூதீன். வீடுகளைச் சுற்றிலும் விறகுகள், அட்டைப் பெட்டிகள், தேவையற்ற சாமான்களைக் குவிப்பதைத் தவிர்ப்பதே நல்லது என்கிறார் அவர்.
ஆனால் கோடைக் காலங்களில் பாம்புகள் அதிகமாக குடியிருப்புகளுக்கு வரும், மற்ற காலங்களில் வருவது குறைவு என்பது பொதுவான கருத்தே தவிர, அதற்கான ஆராய்ச்சித் தரவுகள் எதுவுமில்லை என்கிறார் சென்னை பாம்புப் பூங்கா நிர்வாகியும், ஊர்வன ஆராய்ச்சியாளருமான கணேசன்.
”எந்தப் பருவகாலமாக இருந்தாலும் குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் செல்வது இயல்பான ஒரு விஷயம்தான். பாம்புகள் வீட்டுக்குள் வந்து விட்டால், அவற்றை அடிக்கவோ, துரத்தவோ முயற்சி செய்யாமல், அருகிலுள்ள வனத்துறையினர் அல்லது தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிப்பதுதான் நல்லது. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்” என்கிறார் கணேசன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு