பாகிஸ்தான் கிரிக்கெட் போயே போய் விட்டது, இனி மீள வழியில்லை. இந்த நிலைமைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொண்டு வந்து விட்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளே காரணம் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் சாடியுள்ளார்.
சர்பராஸ் நவாஸ் பாகிஸ்தானுக்கு ஆடும் காலத்திலேயே சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர். இப்போது இவருக்கு வயது 76. ஒரு காலத்தில் இவரும் இம்ரான் கானும் புதிய பந்தை எடுத்தால் எதிரணியினர் நடுங்கித்தான் போவார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு கிரிக்கெட் பற்றிய அறிவு சுத்தமாக இல்லை என்கிறார் சர்பராஸ் நவாஸ்.
“நான் நெருக்கமாக பாகிஸ்தான் போட்டிகளையும் வாரியச் செயல்பாடுகளையும் அவதானித்து வருகிறேன். நான் வாரிய சேர்மன் மோசின் நக்விக்குக் கடிதம் எழுதினேன். இவருக்குக் கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாது. அதனால் சில விஷயங்களை அவருக்குச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால் அவர் ஒன்றையும் கேட்கவில்லை.
இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அழிந்து விட்டது, போயே விட்டது. கிரிக்கெட் தெரியாத ஆட்சியதிகாரிகள் கிரிக்கெட்டை நடத்துகின்றனர். இவர்களுக்கு ஒன்றும் தெரியாததால் முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்தவர்களையே மீண்டும் அழைத்துப் பதவியில் வைக்கின்றனர். அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டுகளில் 3 சேர்மன்கள், 4 கேப்டன்கள் மாறியிருக்கிறார்கள். சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அணித்தேர்வு சரியில்லை. ஸ்பின்னர்களை தேர்வு செய்யவில்லை. அதோடு சயிம் அயூப், ஃபகர் ஜமான் இருவரும் காயம்.
சில வீரர்கள் மேலிடத்தின் ஆதரவினால் அணியில் தேர்வு ஆகியுள்ளனர். ஸ்பின்னர்கள் சாஜித் கான், நோமன் அலி போன்றவர்கள் இங்கிலாந்தை வெற்றி கண்டனர், அவர்களை தேர்வு செய்யவில்லை, இதனை நான் சேர்மனிடம் சுட்டிக்காட்டினேன்.
நல்ல வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. இப்படி தேர்வு செய்து ஆடினால் இந்தியா மட்டுமல்ல, எல்லா அணிகளுமே பாகிஸ்தானை வெல்லும். ஷாஹின் அப்ரீடி காயத்திற்குப் பிறகே வேகத்தைக் குறைத்து விட்டார். நசீம் ஷாவும் தோள்பட்டைக் காயத்திற்குப் பிறகே வேகத்தைக் குறைத்து விட்டார், முதலில் 145 கிமீ வீசிக்கொண்டிருந்தவர் இப்போது 135 கிமீ வேகத்தை எட்டவே திணறுகிறார். ஸ்டம்புக்குள் வீசுவதில்லை” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார் சர்பராஸ் நவாஸ்.