சென்னை: சென்னையில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற ‘கால்பந்து சாம்பியன்ஷிப் 2025’ தொடரில் செயின்ட் பீட்ஸ், டான் போஸ்கோ அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.
சென்னையின் எஃப்சி, நார்விச் சிட்டி எஃப்சியுடன் இணைந்து தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு பல்லவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி பள்ளிகளுக்கு இடையிலான ‘கால்பந்து சாம்பியன்ஷிப் 2025’ தொடர் சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளியில் கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கியது.
இதில் 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 64 அணிகள் பங்கேற்றன. ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த தொடரில் இரு பிரிவுளிலும் மொத்தமாக 1,150 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
12 வயதுக்குட்பட்டோர் பிரிவு இறுதிப் போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷுட் அவுட்டில் செயின்ட் பீட்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
14 வயதுக்குட்பட்டோர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய டான் போஸ்கோ அணி 6-0 என்ற கோல் கணக்கில் பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் அணியை வீழ்த்தியது.
இந்தத் தொடரின் வாயிலாக சென்னையின் எஃப்சி அணியின் திறமை கண்டறியும் குழுவினர் 40 இளம் வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இவர்களுக்கு சென்னையின் எஃப்சி அகாடமியில் சிறப்பு பயிற்சிகள் அளிப்பதற்கான தேர்வு நடத்தப்படும்.
சென்னையின் எஃப்சி அணியின் நட்சத்திர வீரர்களான இர்பான் யாத்வாத், லூகாஸ் பிரம்பில்லா ஆகியோர் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் பி-கிரவுண்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியை நேரில் பார்வையிட்டனர்.
“சிறு வயதிலிருந்தே விளையாடுவது முக்கியம். ஏனெனில், அது வளர்ச்சிக்கு உதவுகிறது. நான் எனது படிப்புடன் இளம் வயதிலேயே விளையாடத் தொடங்கினேன். இது எனக்கும் என் பெற்றோருக்கும் நிறைய உதவியது. நீங்கள் ஆர்வமாக இருந்தால், வாழ்க்கையில் எதையாவது சாதிக்க நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.
உங்களை நீங்கள் நம்ப வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும். இதுபோன்ற பள்ளி போட்டிகள் எனக்கு மிகவும் உதவியது. ஏனென்றால், நான் அடிக்கடி அதில் விளையாடுவேன். இளம் வீரர்களை தேடி கண்டறியும் குழுவினர் இதுபோன்ற போட்டிகளுக்கு வந்து உங்களைக் கண்காணிக்கிறார்கள். நீங்கள் இளமையாக இருக்கும்போது இது மிகவும் உதவும்” என தெரிவித்தார்.
“வீரர்களின் செயல்திறன் நன்றாக இருந்தது. குழந்தைகள் விளையாட்டை ரசிக்கவும், கால்பந்தை ரசிக்கவும் இந்த வகையான போட்டிகள் சிறந்தது. குழந்தைகள் தங்கள் கால்பந்து திறன்களை வெளிப்படுத்த சென்னையின் எஃப்சி வழங்கிய சிறந்த வாய்ப்பு இது. நிச்சயமாக, இந்த போட்டிகளில் இருந்து வீரர்களை சென்னையின் எஃப்சி அணி தேர்வு செய்யலாம்” என லூகாஸ் பிராம்பில்லா கூறினார்.
சென்னையின் எஃப்சி கால்பந்து பள்ளி தலைமை பயிற்சியாளர் ஏ.சகாயராஜ், “இந்த தொடர் இரண்டு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. முதலாவதாக, இது குழந்தைகளுக்கு ஒரு தொழில்முறை சூழலுக்கு ஏற்றவாறான விளையாட்டு நேரத்துடன் விலைமதிப்பற்ற அனுபவத்தை வழங்கியது, அவர்கள் வழக்கமாக பெறும் நேரத்தை விட இந்தத் தொடரில் கூடுதல் நேரம் விளையாடி உள்ளனர்.
இந்த தொடரின் வாயிலாக ஒரு மாதத்தில் உண்மையான வளர்ச்சியைக் கண்டோம். மேலும், சென்னையின் எஃப்சி யூத் லீக் யு-13 மற்றும் யு-15 அணியை கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால் இந்தத் தொடர் இளம் வயதில் திறனை மதிப்பிட எங்களுக்கு உதவியது. பயிற்சி முகாம்கள் மூலம் தயார் செய்யக்கூடிய இளம் வீரர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், அவர்கள் இறுதியில் சி.எஃப்.சி அகாடமியில் சேரலாம்” என்றார்.
14 வயதுக்குட்பட்ட பிரிவில் சவீதா எக்கோ பள்ளியின் கெவின் டி குரூஸ் (10 கோல்கள்), இந்துஸ்தான் இன்டர்நேஷனலின் தமன் கிரிஷ் (9 கோல்கள்) ஆகியோர் முறையே 14 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் அதிக கோல் பதிவு செய்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தனர். டான் பாஸ்கோவின் ரஜ்னீஷ் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியின் மிதுன் ஆனந்த் ஆகியோர் தங்க கையுறை விருதுகளை வென்றனர். கெவின் சி.எஃப்.சி கால்பந்து பள்ளியின் உறுப்பினராக உள்ளார்.