பரபரப்பான இறுதிப்போட்டி: `சமையல் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வென்ற 26 வயது ஐடி ஊழியர் ஸ்ரீமதி!

Share

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவடைந்தது. சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையிலும், அவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் முதற்கட்ட போட்டிகள் மதுரையில் தொடங்கி தஞ்சாவூர் , திருச்சி, ராமதாதபுரம், காரைக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், தென்சென்னை, வடசென்னை என தமிழ்நாடு முழுதும் 13 இடங்களில் நடந்தது.

தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களிலிருந்தும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றனர். ஒவ்வொரு ஊர்களிலும் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் 43 போட்டியாளர்கள் இந்த இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர்.

இந்த மாபெரும் இறுதிப்போட்டியை சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சி, அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், நாகா, லலிதா ஜூவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா கிச்சன் அப்ளையன்சஸ், கீதம் ரெஸ்டாரென்ட் ஆகியவை இணைந்து வழங்கின.

இறுதிப்போட்டி இரண்டு பேட்ச் ஆக நடைபெற்று. முதலில் 22 போட்டியாளர்களும், அடுத்ததாக 21 போட்டியாளர்களும் களம் கண்டனர்.’உணவே மருந்து’ என்ற தீமில் வரகரிசி பிரியாணி, வெற்றிலை பாயாசம், சங்குப்பூ பாயாசம், தென்னக்குறுத்து பனகோட்டா, வெற்றிலை ஜெல்லி, தினை நவதானிய கிச்சடா என்று பல ஆரோக்கியமுள்ள பாரம்பரியமான உணவுகளை சமைத்தனர்.

சரக்கொன்றை புளி, இரண்டு வரி பிரண்டை உள்ளிட்ட அதிகம் அறியப்படாத மூலிகைகள், அரசி வகைகளைப் பயன்படுத்தி பல சுவையான உணவுகளைப் போட்டியாளர்கள் சமைத்து அசத்தினர். நடுவர் செஃப் தீனா முன்பு சமைத்த உணவுகளைக் காட்சிப்படுத்தும்போது, அதன் சிறப்புகளையும் மருத்துவ குணங்களையும் நடுவருக்கு விளக்கினர்.

போட்டியாளர்களின் உணவுகளை ருசித்து, மதிப்பீடு செய்த நடுவர் செஃப் தீனா, “இந்த சமையல் போட்டியினை பார்த்து ஒரு பத்து பேர் தங்கள் வீடுகளில் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து பார்த்தால் அதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றி” என்றார்.

நள்ளிரவு வரை நடைபெற்ற இறுதிப்போட்டியின் முடிவில், ‘சமையல் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை வென்றார் திருநெல்வேலியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஸ்ரீமதி. ஐடி ஊழியரான இவர் பனங்கிழங்கு, அதலைக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உணவுகளைத் தயாரித்து அசத்தினார். புதுச்சேரியை சேர்ந்த பிரேமா இரண்டாம் இடத்தையும், சென்னையே சேர்ந்த நஃபீசா இலியாஸ் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com