இன்றைக்கு உடல்நலம் மற்றும் மருத்துவம் தொடர்பாக கிட்டத்தட்ட எல்லோருக்குமே நிறைய விஷயங்கள் தெரிகின்றன. எல்லாம் கூகுள் டாக்டர் உபயம்தான். ஆனால், அவர்களுக்குத் தெரிந்த தகவல்கள் அத்தனையும் நூறு சதவிகிதம் உண்மை என்று சொல்ல முடியாது. நாள்பட்ட இருமல் என்று டைப் செய்தால், ‘தொண்டை புற்றுநோயாக இருக்கலாம்’ என்று பயம் காட்டி விடுகிறது கூகுள். இதனால் இல்லாத பிரச்னைகளை இருப்பதாக நினைத்துக்கொண்டு, பலரும் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

”நீரிழிவு வந்தவர்களுக்கு ஆணுறுப்பு விறைப்புத்தன்மையிலும் பிரச்னை வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், அது நீரிழிவு வந்த அனைவருக்குமே வந்துவிடாது. ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்காதவர்களுக்கே வரும். தவிர, நீரிழிவு வந்தவர்களுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை வருவதற்கு 5 வருடங்கள் வரை ஆகும். இது தெரியாமல் பல ஆண்களும் பயந்துகொண்டிருக்கிறார்கள்.
அந்த ஆணுக்கு 35 வயதுதான். டயாபடீஸ் ஆரம்பநிலை என்று ரத்தப்பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் பற்றி கூகுளில் தேடியிருக்கிறார்கள். அது, ’60 சதவிகிதம் நீரிழிவு நோயாளிகளுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை வரும்… ஆண்மை குறைந்துபோகும்…’ என்று சொல்லியிருக்கிறது. அவ்வளவுதான், தனக்கும் ஆண்மைக்குறைபாடு வரப்போகிறது என்று பயப்பட ஆரம்பித்திருக்கிறார். ‘செக்ஸ் வெச்சுக்கிட்டாதானே இது தெரியும்’ என்று யோசித்து தாம்பத்திய உறவையும் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். விளைவு, நீரிழிவால் மட்டுமல்லாமல் பயம் காரணமாகவும் விறைப்புத்தன்மையில் பிரச்னை வர ஆரம்பித்திருக்கிறது. நீரிழிவு வந்தவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், அவர்களுக்கு ஆண்மைக்குறைவு உண்மையிலும் நிகழலாம். உளவியல் பிரச்னையாலும் நிகழலாம். சிலருக்கு இந்த இரண்டு காரணங்களாலும் நிகழலாம். அந்த ஆணுக்கு விறைப்புத்தன்மைக்கான மருந்து, மாத்திரைகளோடு பயத்தைப் போக்கும் ஆலோசனைகளும் தந்து அனுப்பினேன்.
இன்னோர் ஆண். அவருக்கும் நீரிழிவு இருக்கிறது. ‘நான் வாக்கிங் போறேன்… டயட் ஃபாலோ பண்றேன். நீரிழிவு என்னை ஒண்ணும் செய்யாது’ என்று தைரியமாக இருந்திருக்கிறார். விளைவு, 45 வயதில் பக்கவாதம் வந்து, உடனடியாக சிகிச்சை செய்ததால் ஓரளவு நடமாட்டத்துடன் இருக்கிறார். 50 வயதில் ஆண்மைக்குறைவு என்று என்னிடம் வந்தார். சிகிச்சையும், ஆலோசனையும் தந்து அனுப்பினேன். நீரிழிவைப் பொறுத்தவரை அதிகப்படியான பயமும் தேவையில்லை… அலட்சியமும் தேவையில்லை… விறைப்புத்தன்மையில் பிரச்னை வந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், விறைப்புத்தன்மைக்கான மாத்திரைகள் ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் என்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது, ரத்த அழுத்தம் வராது, பக்கவாதம் வராது” என்கிறார் டாக்டர் காமராஜ்.