சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இந்நிலையில், இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
சிட்னி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்னுக்கும், ஆஸ்திரேலியா 181 ரன்னுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது.
கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளை விளாசினார். இந்த நிலையில் போலண்ட் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் போலண்ட் ஆகி வெளியேறினர். கோலியின் விக்கெட்டையும் போலண்ட் வீழ்த்தினார். கோலி விக்கெட்டை அவர் கைப்பற்றுவது இது ஐந்தாவது முறை.
கேப்டன் ரோஹித் விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக இந்தப் போட்டியில் இடம்பெற்ற ஷுப்மன் கில் 13 ரன்களில் வெளியேறினார். 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. அந்த இக்கட்டான தருணத்தில் ரிஷப் பந்த் அஞ்சாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி அசத்தினார். 33 பந்துகளில் 61 ரன்களை அவர் விளாசினார். இந்தப் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் இது. நிதிஷ் குமார் ரெட்டி 4 ரன்களில் வெளியேறினார்.
இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 32 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. ஜடேஜா 8 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்கள் உடன் விளையாடுகின்றனர். ஆஸ்திரேலிய தரப்பில் 13 ஓவர்கள் வீசி 42 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் ஸ்காட் போலண்ட்.
இந்தப் போட்டியின் முதல் நாளன்று 11 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இரண்டாம் நாளில் இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. நாளைய தினமும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி மூன்றாம் நாளில் விரைந்து ரன் சேர்க்கவே விரும்பும். இது இந்திய அணிக்கு சாதகம் என்றாலும் பும்ரா பந்து வீசுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது செஷனில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதுகு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும். மருத்துவக் குழு அவரை கண்காணித்து வருவதாகவும் போட்டிக்கு பின்னர் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்தார்.